சபரிமலை நடை அடைப்பு!
மண்டல, மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்ததால் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டது.
உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 15ஆம் தேதி மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.
டிசம்பர் 26ஆம் தேதி மண்டல பூஜைகள் நிறைவடைந்ததால் கோயில் நடை அடைக்கப்பட்டு, 3 நாட்களுக்கு பிறகு மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்த நிலையில், கடந்த 18ஆம் தேதியுடன் மண்டல, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நிறைவடைந்தது.
இந்நிலையில், அதிகாலை 5 மணிக்கு சபரிமலை கோயிலில் கணபதி ஹோமம் நடைபெற்றது. மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி, ஐயப்ப விக்கிரகத்தில் திருநீறு பூசி ஐயப்பனை தவக்கோலத்தில் இருத்தி கோயில் நடையை சாத்தினார்.
பின்னர், கோயில் சாவி பந்தளம் மன்னர் பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 18-ம் படி வழியாக திருவாபரண பெட்டிகள் சன்னிதானத்தின் கீழ்பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.
அதன் பின்னர் காலை 7 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு, திருவாபரண பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பந்தளம் அரண்மனைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.