சமூக ஆர்வலர் இறப்பில் திடீர் திருப்பம்!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சமூக ஆர்வலர் விபத்தில் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், புதிய திருப்பமாக அவர் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வெங்களூர் கிராமத்தை சேர்ந்த ஜகபர் அலி, அதிமுக சிறுபான்மை அணி நிர்வாகியாக பொறுப்பு வகித்தார். இவர் கடந்த 13ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.
அதில் திருமயம் அருகே துளையானூர் கிராமத்தில் ஏராளமான சட்டவிரோத கல்குவாரிகள் உள்ளதாகவும், ஆர்.ஆர்.குரூப் என்ற நிறுவனம் அதிகளவு கனிம கொள்ளையில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து வட்டாட்சியரிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும், மாவட்ட ஆட்சியர் இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அதிகாரிகள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை அழைத்து போராட உள்ளதாகவும் ஜகபர் அலி எச்சரிக்கை விடுத்தார்.