சரியான பாதையில் சென்றால், அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா உலகின் நம்பர் 1 இடத்தை அடைய முடியும் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உறுதி!
சரியான பாதையில் சென்றால், அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா உலகின் நம்பர் 1 இடத்தை அடைய முடியும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
Advertisement
அரியானா மாநிலம் குருகிராமில் “விஷன் ஃபார் விக்சித் பாரத்-விவிபா 2024” மாநாடு நடைபெறுகிறது. பாரதிய சிக்ஷன் மண்டல் முப்பெரும் விழாவில் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்.
அப்போது, 16 ஆம் நூற்றாண்டு வரை பல துறைகளில் பல முக்கியமான கண்டுபிடிப்புகளை செய்தோம், ஆனால் அதன் பிறகு நிறுத்தி விட்டதாக தெரிவித்தார்.
உலக அளவில் இந்தியாவை நம்பர் 1 ஆக்க வேண்டும் என்றும், மற்றவர்களை நகலெடுப்பதை விட நமக்கான தரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். உண்மையான வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியுடன் மட்டுப்படுத்தப்படாமல் மனம் மற்றும் அறிவு ஆகிய இரண்டின் வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
வளர்ச்சி என்பது பொருளாதார ஆதாயம் மட்டுமல்ல, மன மற்றும் பொருள் செழிப்பு இரண்டின் கலவையாகவும் இருக்க வேண்டும் என்றும் மோகன் பகவத் கேட்டுக்கொண்டார்.
ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான உறவைப் பற்றி குறிப்பிட்ட அவர், "இரண்டும் மனிதகுலத்தின் நலனையே நோக்கமாகக் கொண்டவை" என்றும் தெரிவித்தார்.
இளம் ஆராய்ச்சியாளர்களின் முக்கியத்துவம் குறித்து பேசிய பகவத், 2047க்குள் வளர்ந்த இந்தியா என்ற பார்வைக்கு உறுதியான வடிவத்தை வழங்குவதில் அவர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள் என்றார்.
கல்வியை வணிகமயமாக்கக் கூடாது என்றும், இந்தியா தன்னிறைவு பெற்றதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் மாறும்போது உண்மையான முன்னேற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
நாம் சரியான பாதையில் சென்றால், அடுத்த 20 ஆண்டுகளில், உலகின் முதல் இடத்தைப் பிடிக்க முடியும், என்று அவர் கூறினார், இந்தியா உலகின் நம்பர் 1 ஆக இருப்பதைக் காண கடவுள் நேரத்தையும் ஆரோக்கியத்தையும் தர வேண்டும் என்று தான் பிரார்த்திப்பதாக மோகன் பகவத் தெரிவித்தார்.