சரியும் நேபாள சுற்றுலா : கயிலாய யாத்திரைக்கு கட்டுப்பாடு விதிக்கும் சீனா - சிறப்பு கட்டுரை!
இந்திய சுற்றுலாப் பயணிகள் திபெத்தில் நுழைவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை சீனா திணித்து வருகிறது. இதன் காரணமாக, நேபாளத்தின் சுற்றுலாத் துறை கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
இந்துகள், திபெத்தியர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு மிகவும் புனிதமான மலை கயிலாயம் ஆகும். இமயமலையில் உள்ள கயிலாயம் கடல் மட்டத்தில் இருந்து, 6,638 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதி சீனா, இந்தியா மற்றும் நேபாளம் இடையேயான எல்லையில் அமைந்துள்ளது. குறிப்பாக இது சீனாவின் திபெத் எல்லைப் பகுதியில் வடக்கே அமைந்துள்ளது.
இந்த இடத்தில், மானசரோவர் நன்னீர் ஏரியும், இராட்சதலம் எனும் உப்பு நீர் ஏரியும் உள்ளன. சிந்து, சத்லஜ், பிரம்மபுத்திரா மற்றும் கர்னாலி ஆகிய நான்கு நதிகளும் உற்பத்தி ஆகின்ற இடம் இதுவாகும்.
இந்து மதம் உட்பட பல்வேறு சமயங்களுக்கு புனிதமான தலமாக கயிலாயம் கருதப்படுவதால், இந்தியா, சீனா, நேபாளம் மட்டுமின்றி, மற்ற நாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் கயிலாய மலைக்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.
1951ம் ஆண்டிலிருந்து சீன அரசால் கயிலாய மலை மற்றும் மானசரோவர் ஏரிக்கு யாத்திரை செல்ல அனுமதிக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு சீன-இந்திய உடன்படிக்கை ஏற்படுத்தப் பட்டது. அதன்படி, இந்தியாவில் இருந்து பக்தர்கள் கயிலாய புனித யாத்திரைக்குச் செல்ல உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
1962 ஆம் ஆண்டு நடந்த சீன-இந்திய போர் ஆகியவற்றின் விளைவாக கயிலாய யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருபது ஆண்டுகளுக்குப் பின் 1981 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து புனித யாத்திரை செல்ல மீண்டும் அனுமதிக்கப்பட்டது.
கொரொனா தொற்று காரணமாக, 2020ம் ஆண்டு முதல் கயிலாய புனித யாத்திரைக்கு மூன்று ஆண்டுகளுக்குச் சீனா தடை விதித்தது.
இந்தியாவில் இருந்து கயிலாயம் மற்றும் மானசரோவர் புனித யாத்திரைக்கு நேபாளம் வழியாக செல்ல வேண்டும்.பொதுவாக ஏப்ரல் முதல் அக்டோபர் வரை இந்த புனித யாத்திரை மேற்கொள்வார்கள் என்பதால், இந்த புனித யாத்திரை , நேபாளத்துக்கு அதிகமான சுற்றுலா வருவாயை ஈட்டி தந்தது.
டூர் ஆபரேட்டர்கள், ஹோட்டல்கள், விமான நிறுவனங்கள் மற்றும் ஹெலிகாப்டர் சேவைகள் உட்பட பல துறைகள் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையால் தங்கள் வணிகத்தில் லாபம் பார்த்தன. கடந்த மே முதல் நேபாளம்-திபெத் எல்லை திறக்கப்பட்டது என்றாலும், புனித யாத்திரை செல்லும் இந்தியர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை சீனா திணித்து வருகிறது.
இதனால், இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது. இதன் விளைவாக நேபாளத்தின் சுற்றுலா துறை பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக, ஹோட்டல்கள், போர்ட்டர்கள் மற்றும் போக்குவரத்து ஆபரேட்டர்கள் பல மில்லியன் டாலர் வணிகங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளன.
இந்த வருவாய் ஆதாரம் இல்லாமல், நேபாளம் தன் சுற்றுலா சார்ந்த பொருளாதாரத்தை நிலைநிறுத்துவது மிகவும் கடினமானதாகும். சீனாவின் கட்டுப்பாடுகளுக்கு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான புவிசார் அரசியல் சூழலே காரணம் என்றும் கூறப்படுகிறது.
கயிலாயம் மற்றும் மானசரோவர் புனித யாத்திரை செல்லும் இந்திய பயணிகளுக்கு திபெத்தை மீண்டும் திறப்பது ஒன்றே நேபாளத்தின் சுற்றுலா தொழில்துறையை காப்பாற்றும் என்று வணிக வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
புவிசார் அரசியல் காரணங்களுக்கு அப்பால், சர்வதேச சுற்றுலாவினரின் நம்பிக்கையை மீண்டும் பெற, பாதுகாப்பு, மற்றும் அதிக பயணச் செலவுகள் உள்ளிட்ட மற்ற பிரச்சினைகளுக்கு நேபாளம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் கூறப்படுகிறது.