சரிவில் இருந்து சாதனை - தடைகளை தாண்டி ட்ரம்ப் சாதித்தது எப்படி? சிறப்பு கட்டுரை!
78 வயதாகும் டிரம்ப் பல்வேறு தடைகளையும் விமர்சனங்களையும் தாண்டி அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். அதிகார பூர்வமாக, வரும் ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் பதவி ஏற்கும் புதிய அதிபருக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, டிரம்ப் ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதியாக இருந்தார். 2020 அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனிடம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிராக டிரம்பின் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றங்கள் நிராகரித்தன.
ஜோ பைடனின் வெற்றியைப் பிரதிநிதிகள் சபை முறையாகச் சான்றளிக்க வேண்டிய நாளில் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்த டிரம்ப், வாஷிங்டனில் தன் ஆதரவாளர்களை அமெரிக்க நாடாளுமன்ற அலுவலகத்துக்குப் பேரணியாக வருமாறு அழைப்பு விடுத்தார். அந்தப் பேரணியில் ஏற்பட்ட வன்முறை கலவரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் காயமடைந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க கல்விச் செயலாளர் பெட்ஸி டிவோஸ் மற்றும் போக்குவரத்து செயலாளர் எலைன் சாவோ உள்ளிட்ட ட்ரம்பின் ஆதரவாளர்களே பதவி விலகினர். டிரம்ப்பின் ஆதரவாளர்கள் மட்டுமின்றி அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மைக்ரோசாப்ட், நைக் மற்றும் வால்கிரீன்ஸ் உட்பட 10-க்கும் மேற்பட்ட பெரிய வணிக நிறுவனங்களும் அவருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றன.
ஜோ பைடன் பதவியேற்ற நாளில், அந்த விழாவில் கலந்து கொள்ள மறுத்து 152 ஆண்டுகால அமெரிக்கப் பாரம்பரியத்தை டிரம்ப் உடைத்தார். தேர்தலில் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்விக்குப் பிறகு, டிரம்ப் மீண்டும் அரசியலுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பே இல்லை என்று பலரும் நம்பினார்கள்.
2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ‘அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப்: தி எண்ட்’ என்ற தலைப்பிலும், ‘ஒரு பயங்கரமான சோதனை முடிவுக்கு வந்தது’ என்ற துணைத் தலைப்பிலும் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கட்டுரைகள் வெளியிட்டது. அதில் டிரம்பின் அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டதாக நேரடியாக எழுதியது.
34 குற்ற வழக்குகள், ஒரு வழக்கில் தண்டனை, இன்னும் நிலுவையில் இரண்டு வழக்குகள், 6 முறை திவால் அறிவிப்பு மற்றும் இரு முறை தகுதி நீக்கம், என்ற பிரச்சனைகள் இருந்த போதிலும் சரிவிலிருந்து பினீக்ஸ் பறவை போல் முன்னை விட அதிக பலத்துடன் டொனால்ட் ட்ரம்ப், மீண்டும் வெற்றி பெற்று வரலாறு காணாத சாதனை படைத்திருக்கிறார்.
வரும் ஜனவரி 20ம் தேதி பதவியேற்பு நாளுக்கு முன்னதாக ட்ரம்ப் தனது நிர்வாக குழுவை ஏற்படுத்த இன்னும் சுமார் 75 நாட்கள் உள்ளன. முன்னாள் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு நிர்வாகத்தை டிரம்ப் கட்டமைப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அமெரிக்க அரசு நிர்வாகத்தில் சுமார் 4000 க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். இதில் 1200 க்கும் மேற்பட்ட பதவிகளின் நியமனத்துக்கு , சென்ட்டின் ஒப்புதல் தேவை. இம்முறை செனட்டிலும் குடியரசு கட்சியே அதிக இடங்களைக் கைப் பற்றி உள்ளது. எனவே அதிபர் ட்ரம்ப் கையில் தான் முழு அமெரிக்க நிர்வாகமும் இருக்கப் போகிறது.
தனது முதல் நிர்வாகத்தைப் போல் அல்லாமல், மிக சிறந்த நிர்வாகத்தை உருவாக்குவதில் உறுதியாக இருக்கும் ட்ரம்ப், அதற்காக, நிர்வாக மாற்றத்துக்கான குழு ஒன்றை நியமித்திருக்கிறார்.
கென்னடி ஜூனியர், முன்னாள் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் துளசி கபார்ட் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் டிரம்ப் உட்பட நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் இக்குழுவில் உள்ளனர். இக்குழுவின் தலைவர்களாக ஹோவர்ட் லுட்னிக் மற்றும் லிண்டா மக்மஹோன் ஆகியோரை டிரம்ப் நியமித்துள்ளார்.
தனது கருத்தியல் கோட்பாடுகளுடன் ஒத்துப்போகும், நம்பிக்கை உள்ள நபர்களை மட்டுமே முக்கிய நிர்வாக பதவிகளுக்கு ட்ரம்ப் தேர்ந்தெடுக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிய வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் 47 வது அதிபராக தேர்வாகியுள்ள ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த சந்திப்பின் போது, ட்ரம்பிடம், நிர்வாகத்தை மாற்றி ஒப்படைப்பது குறித்து முடிவெடுக்கப்படலாம் என்றும் வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளன.