சாட்டையடி போராட்டம் - பின்னணியும், முக்கியத்துவமும் சிறப்பு தொகுப்பு!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தன்னை தானே வருத்திக்கொள்ளும் இந்த சாட்டையடி போராட்டம் ஏன்?, தமிழர்களின் ஆன்மிக கலாச்சாரத்தோடு தொடர்புடைய சாட்டையடியின் பலன் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...
வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது என்பது இந்து மரபில் தொடக்கம் முதலே வழக்கமாக இருந்து வருகிறது. அங்க பிரதட்சனம் செய்வது, முடி காணிக்கை அளிப்பது, பால் குடம் எடுப்பது, காவடி சுமப்பது என்பவை அதில் அடக்கம்.
இதில் இன்னும் ஒருபடி மேலே சென்று பல பக்தர்கள் தங்களை தாங்களே வருத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தும் நடைமுறையும் இருந்து வருகிறது. அலகு குத்திக்கொள்வது, தீ மிதிப்பது, ஆணியால் செய்யப்பட்ட காலணிகளை அணிந்தபடி நடப்பது, தலையில் தேங்காய் உடைப்பது, கத்தி போட்டுக்கொள்வது உள்ளிட்டவை கடுமையான நேர்த்திக்கடன்களாக கருதப்படுகின்றன.
அந்த வகையில், குறிப்பிட்ட வேண்டுதலை நிறைவேற்றக்கோரி சாட்டையால் அடித்துக்கொள்ளும் வழக்கமும் பல கோயில்களில் நடைமுறையில் இருந்து வருகிறது. குறிப்பாக கொங்கு மண்டல கோயில்களில் இத்தகைய நேர்த்திக்கடன்களை அதிகம் காணலாம்.
கோவை பூசாாிப்பாளையத்தில் உள்ள அடைக்கலம்மன் கோயிலில் நடைபெறும் சாட்டையடி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மழை வேண்டி சாட்டையடி வழிபாடு நடைபெறும். இதில் பங்கேற்கும் பக்தர்கள், கோயில் பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கி வழிபாடு நடத்துவர்.
அதேபோல் மணப்பாறை அருகே உள்ள முண்டிப்பட்டி சென்னப்பன் மகாலட்சுமி காவேரி அம்மன் கோயிலில் குறும்பர் இன மக்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இப்படி, சாட்டையால் அடித்துகொள்வது தமிழர்களின் முக்கியமான வழிபாட்டு முறையாக இருந்து வருகிறது. அதன் நீட்சியாகதான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துகொண்டுள்ளதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக தனக்கும் தனது குடும்பத்திற்கும் நன்மைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கடுமையான நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படும். ஆனால், தமிழகத்தில் தொடர்ந்து வரும் அவலங்கள் நீங்க வேண்டும் என்ற பொதுநோக்கத்திற்காக அண்ணாமலை தன்னைதானே வருத்திக்கொண்டுள்ளதாக அவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
மேலும், தன்னைதானே வருத்திக்கொள்வது என்பது காந்தியின் சத்தியாகிரக போராட்ட வழிமுறைகளில் ஒன்றாகும். முக்கியமான காலக்கட்டங்களில் எல்லாம் ஒரேஒரு ஆயுதத்தை மட்டும்தான் காந்தி உயர்த்தி பிடித்துள்ளார். அது, தன்னை தானே வருத்திக்கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டம்.
அதன்மூலம் தனது கோரிக்கையையும், தனது நிலைப்பாட்டின் தீவிரத்தையும் அவர் அனைவருக்கும் புரிய வைத்தார். எனவே, அண்ணாமலையின் இந்த சாட்டையடி போராட்டத்தை காந்தியின் அகிம்சை வழி சார்ந்த போராட்டமாகவும் சிலர் கருதுகின்றனர்.