சாட் காம் ஸ்பெக்ட்ரம் போட்டி : சவாலா? வாய்ப்பா? - சிறப்பு கட்டுரை!
இந்தியாவின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் தொடர்பாக போட்டி சூடு பிடித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் ஏர் டெல் நிறுவனமும் எலான் மஸ்க் ஸ்டார் லிங்க் நிறுவனமும் போட்டி போடுகின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
செயற்கைக்கோள் அலைக்கற்றையை நிர்வகிப்பதில் பெரும்பாலான நாடுகள் பயன்படுத்தும் அணுகுமுறையைப் பின்பற்றி ஏலம் விடாமல், நேரடி நிர்வாக ஒதுக்கீடு மூலம் செயற்கைக்கோள் தொடர்பு அலைவரிசைகளை ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏலத்தின் மூலம் அல்லாமல், பிராட்பேண்டிற்கு செயற்கைக்கோள் அலைக்கற்றையை நிர்வாக ரீதியாக ஒதுக்குவதற்கான இந்தியாவின் இந்த முடிவு வாய்ப்பா ? சவாலா ? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.
இந்நிலையில், மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகள் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
ஏற்கெனவே, இந்த அலைக்கற்றையை பெறுவதற்காக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சுமார் 5.5 லட்சம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளன. அதே நேரம், எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் மற்றும் அமேசானின் கைபர் போன்ற உலகளாவிய பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் பிராட்பேண்ட் சேவைகளை எதிர்பார்க்கின்றன.
மேலும், இந்த சாட்காம் நிறுவனங்கள், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய்யிடமும், மத்திய அரசிடமும், செயற்கைக்கோள் அலைக்கற்றைக்கான விலையை குறைவாக வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
நிலப்பரப்பு மற்றும் செயற்கைக்கோள் ஆபரேட்டர்களுக்கு இடையே நியாயமான போட்டியை பேணுவதற்கு ஒரே சேவை, ஒரே விதிகள் என்ற கொள்கை இன்றியமையாதது என்று இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நாடு முழுவதும் செயற்கைக்கோள் அலைக்கற்றையை ஏலத்தில் எடுக்க முயன்று வரும் நிலையில், ஏர்டெல் குழுமம் சாட்காம் உரிமத்துக்கு போட்டியிடுவது இதுவே முதல் முறை ஆகும். செயற்கைக்கோள் ஆபரேட்டர்கள் இந்தியாவின் முன்னணி நெட்வொர்க் ஆபரேட்டர்களுக்கு போட்டியாக அமைவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில், ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் செயற்கைக்கோள் பிரிவு ஆகியவை உள்நாட்டு சாட்காம் உரிமங்களைக் கொண்டுள்ளன. இந்தியாவில் ஸ்டார்லிங்க் மற்றும் கைபர் ஆகிய இரண்டும், செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்கான உரிமத்தை இன்னும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமேசான் மற்றும் ஸ்டார்லிங்கின் விண்ணப்பங்கள், இன்னும் ஒழுங்குமுறை ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.மத்திய அரசின் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் அனுமதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் சாட்காம் பிராட்பேண்ட் சேவை சந்தை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுதோறும் 36 சதவீத வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2030ம் ஆண்டுக்குள் 1.9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சந்தையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சாட்காம் குறித்த தனது பரிந்துரைகளை டிராய் விரைவில் வழங்க வாய்ப்புள்ளது, மேலும் நவம்பர் 8 ஆம் தேதி திறந்தவெளி விவாதம் நடைபெறும்.