சாத்தனூர் அணை திறப்பு விவகாரம் - சட்டப்பேரவையில் காரசார விவாதம்!
சட்டப்பேரவையில் சாத்தனூர் அணை திறப்பு, செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சாத்தனூர் அணை முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்டதாக அதிமுக உறுப்பினர் தங்கமணி கூறிய குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், பொதுமக்களுக்கு 5 முறை எச்சரிக்கை கொடுக்கப்பட்ட பின்னரே அணை திறக்கப்பட்டதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அறிவிப்பு கொடுக்கப்பட்ட கால் மணி நேரத்தில் அணை திறக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், அதிமுக ஆட்சியின்போது செம்பரம்பாக்கம் ஏரி அறிவிப்பு கொடுத்த பின்னரே திறக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் திறந்ததும, அதிகளவில் தண்ணீர் திறந்ததுமே பாதிப்புக்கு காரணம் என சிஏஜி அறிக்கை சொல்வதாக கூறினார். அப்போது எதிர்வாதமிட்ட எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், அடையாற்றில் ஒரு லட்சம் கனஅடி நீர் தாரளமாக செல்லும் என பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்தாலே அடையாறு கரையோரம் உள்ள குடியிருப்புகள் சேதமாகும் என தெரிவித்ததுடன், ஒரு லட்சம் கனஅடி நீர் செல்லும் என்பதை நிரூபிக்க தயாரா என கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு செம்பரம்பாக்கம், சாத்தனூர் அணை திறப்பு தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.