சான்றோர், ஆன்றோர்களின் அடையாளங்களை அழிக்க திமுக முயற்சி! : எச்.ராஜா குற்றச்சாட்டு
தமிழ் வளர்த்த சான்றோர்கள், அறம் வளர்த்த ஆன்றோர்கள் அனைவரின் அடையாளங்களையும் அழிக்க திமுக முயல்வதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டி உள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி இனி திருவள்ளுவரின் சிலையை "பேரறிவு சிலை" என அனைவரும் அழைக்க வேண்டுமென, திருவள்ளுவரின் நெற்றியில் இருந்து திருநீரை அழித்த திராவிட மாடல் தலைவரான முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களை காட்டு மிராண்டிகள் என்றும், தமிழை காட்டுமிராண்டி மொழி எனவும் ஏளனம் செய்து தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரத்தை நாத்திகம் என்கிற பெயரில் சீரழித்து திருக்குறளை கேவலமாக விமர்சித்த ஈவெரா சிலையை "பேரழிவு சிலை" என அழைக்கக் கூறுவாரா முதல்வர் ஸ்டாலின் என்றும் அவர் வினவியுள்ளார்.
வள்ளுவன் தன்னை உலகினுக்குத் தந்து வான்புகழ் கொண்டது தமிழ்நாடு என தமிழர்கள் அனைவரும் பெருமிதம் கொள்வதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், வள்ளுவப் பெருந்தகையின் பெயரை வருங்கால சந்ததிகளின் சிந்தனைகளுக்கும், செவிகளுக்கும் எட்டாமல் இருட்டடிப்பு செய்யும் சதியோ முதல்வர் ஸ்டாலினின் கூற்று என்கிற ஐயம் அனைவருக்கும் எழுவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
வள்ளுவரின் நெற்றியிலிருந்தும்,
வள்ளலாரின் நெற்றியிலிருந்தும்,
ஒளவையாரின் நெற்றியிலிருந்தும்,
திருநீறை அழித்த திராவிட மாடல் தீய சக்திகள், தமிழ் வளர்த்த சான்றோர்கள், அறம் வளர்த்த ஆன்றோர்கள் அனைவரின் அடையாளங்களையும் அழிக்க திட்டமிட்டு அவர்களின் திருப்பெயரையும் அழிக்க முயல்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிவதாக அவர் கூறியுள்ளார்.
திருக்குறள் "பேரறிவு" என்பதில் மிகையேதும் இல்லை என்று கூறியுள்ள ஹெச்.ராஜா, ஆனால் திராவிடம் "பேரழிவு" என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும், தமிழ் வாழ வேண்டுமானால் திராவிடம் அஸ்தமனமாக வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.