சாம்ராஜ்யம் சரிந்த கதை! : மகாராஷ்ட்ராவின் சாணக்யர் வீழ்ந்தது எப்படி?
சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியால் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்ட்ராவின் சாணக்யர் என்றழைக்கப்பட்ட சரத்பவார் சரிந்தது எப்படி என்பதை பார்க்கலாம்.
Advertisement
மகாராஷ்ட்ராவின் மூத்த அரசியல்வாதி... அரசியல் வியூகங்களை வகுப்பதில் வல்லவர்... காங்கிரஸ், உத்தவ் தாக்ரே மற்றும் தேசியவாத காங்கிரஸை உள்ளடக்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணி உருவாக காரணமானவர்... என்றெல்லாம் அழைக்கப்பட்ட சரத்பவாரின் அரசியல் வாழ்க்கை அந்திமக் காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
கவர்ந்திழுக்கும் பேச்சால் மராட்டிய அரசியல் மேடைகளை தம் வசப்படுத்தி வைத்திருந்த சரத்பவார், தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும் கெட்டிக்காரர். 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி குடை வேண்டாம் என்று கூறிவிட்டு கொட்டும் மழையில் பேசிய சரத்பவார், "மழை மூலம் கடவுள் தம்மை ஆசீர்வதிப்பதாக" கூறினார்.
தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின் போதுகூட சரத்பவார் உரையாற்றிய நேரத்தில் மழை பெய்தது. அதன் மீது எப்போதும் நம்பிக்கை கொண்ட அவர், நல்ல முடிவுகளையே எதிர்பார்த்து காத்திருந்தார். முன்பெல்லாம் சரத்பாரை ஆசிர்வதித்த மழை இம்முறை சரிவின் அடையாளமாக மாறியிருக்கிறது. ஆம் தமது அரசியல் வாழ்வில் முன்னெப்போதும் இல்லாத வீழ்ச்சியை சந்தித்திருக்கிறார் சரத்பவார்.
கடந்த தேர்தல்களில் எல்லாம் அரசியல் எதிரிகளை எதிர்த்து போராடிய அவர், இந்த முறை சொந்த குடும்பத்தை எதிர்த்தே போராட நேர்ந்தது. நேரெதிர் சித்தாந்தங்களைக் கொண்ட காங்கிரஸையும் சிவசேனாவையும் ஒருகுடையின்கீழ் கொண்டுவர முடிந்த சரத்பவாரால் தமது கட்சியையும் குடும்பத்தையும் ஒற்றுமையாக வைத்திருக்க முடியவில்லை. எனினும் நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றி அவருக்கு நம்பிக்கை அளித்தது. அந்த தெம்போடு தாம்தான் தேசியவாத காங்கிரஸின் அசல் முகம் என்ற முழக்கத்தோடு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்ட சரத்பவார், பெரும் தோல்வியை சந்தித்திக்கிறார்.
87 தொகுதிகளில் களமிறங்கிய அவரது கட்சி வெறும் 13 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2019 சட்டப்பேரவைத் தேர்தலோடு ஒப்பிடும் போது இது மிக மிகக் குறைவு.
மேற்கு மகாராஷ்ட்ராவில் சரத்பவாருக்கும் அவரது கட்சிக்கும் அதிக செல்வாக்கு உண்டு. ஆனால் அங்குள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெறும் 11 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ். அவரது உணர்வுப்பூர்வமான உரைகள் இந்த தேர்தலில் எடுபடவில்லை என்பதை இதன்மூலம் அறியலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
பவார் குடும்பத்தின் கோட்டை என்றழைக்கப்படும் பாராமதி தொகுதியிலும் சரத்பவாருக்கு தோல்வியே கிடைத்திருக்கிறது. அங்கு களமிறங்கிய சரத்பவாரின் பேரன் யுகேந்திர பவாருக்கு வெற்றி கிட்டவில்லை.
இத்தகைய பெரும் சரிவின் எதிரொலியாக மாநில மற்றும் தேசிய அரசியலில் பல்வேறு வியூகங்களை வகுத்து வெற்றி கண்டவரும் மகாராஷ்ட்ராவின் சாணக்யர் என்றழைக்கப்பட்டவருமான சரத்பவார், ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காலம் முடிந்ததும் 2026-ஆம் ஆண்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வுபெறுவார் என்று கூறப்படுகிறது.