சாலை விபத்தில் இருவர் பலி: மறியலில் ஈடுபட்டோர் மீது தடியடி!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், பாலம் அமைக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள செந்தூர் பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் மற்றும் ஜீவா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது கார் மோதி உயிரிழந்தனர்.
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற திண்டிவனம் டிஎஸ்பி பிரகாஷ், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால், சாலையின் இருபுறமும் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செந்தூர் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படும் நிலையில், அங்கு பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.