சிகிச்சை பலனின்றி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு!
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் 55 வயதான காந்திமதி யானை, பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. இந்நிலையில் காந்திமதி யானைக்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
யானை நிற்க முடியாமல் படுத்த படுக்கையான யானையை, கிரேன் மூலம் தூக்கி நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் காந்திமதி யானையால் நிற்க முடியாததால், கால்நடை மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. இந்நிலையில் நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, சிகிச்சை பலனின்றி, பரிதாபமாக உயிரிழந்தது.
காந்திமதி யானையை புத்துணர்வு முகாமுக்கு அழைத்துச் செல்லுமாறு கோரிக்கை விடுத்தும் அதனை அரசு கண்டு கொள்ளாததே உயிரிழப்புக்கு காரணம் என பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நெல்லை மக்களின் செல்லப் பிள்ளையாக வலம் வந்த கோயில் யானை காந்திமதியின் உயிரிழப்பு, பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.