சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டை திட்டம் இன்று முதல் அமல்!
அனைத்து வகை பொது போக்குவரத்துகளிலும் எளிதில் பயணம் செய்வதற்கான சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டை திட்டம் இன்று முதல் மாநகர பேருந்துகளிலும் அமலுக்கு வருகிறது.
சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டு திட்டமானது ஒரே அட்டையை பயன்படுத்தி பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் பயணம் மேற்கொள்ளும் வகையில் கொண்டு வரப்பட்டது.
அதாவது இந்தியாவின் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் ஒரே அட்டையை ஸ்வைப் செய்யும் முறை கடந்த 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அட்டையை அனைத்து விதமான பொதுபோக்குவரத்துகளிலும் பயன்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகரப் பேருந்துகளிலும் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தும் முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இதனை அறிமுகப்படுத்தி வைக்க உள்ளார்.