சிதம்பரம் நடராஜர் கோயில் சொத்துக்கள் விற்பனை விவகாரம் - கூடுதல் ஆதாரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், பொது தீட்சிதர்களால் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய இந்து அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, விற்பனை செய்யப்பட்ட நிலங்கள், தீட்சிதர்களால் சொந்தமாக சம்பாதித்த சொத்துக்கள் என பொதுதீட்சிதர்கள் தரப்பில் ஆட்சேபம் தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், 2 ஆயிரம் ஏக்கர் நிலம் விற்பனை செய்ததாக கூறிய அறநிலையத்துறை, வெறும் 20 ஏக்கருக்கான ஆவணத்தை மட்டுமே தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இவ்வழக்கில் கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு அனுமதி வழங்கி, விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் அன்றைய தினம் கட்டளை தீட்சிதர்களின் பெயர்- முகவரி உள்ளிட்ட விபரங்களை சேகரித்து தாக்கல் செய்யும்படி பொது தீட்சிதர்கள் தரப்புக்கும் உத்தரவிட்டனர்.