For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சிதறும் இண்டி கூட்டணி : மம்தாவா? ராகுலா? முற்றும் மோதல் - சிறப்பு கட்டுரை!

08:00 AM Dec 21, 2024 IST | Murugesan M
சிதறும் இண்டி கூட்டணி   மம்தாவா  ராகுலா  முற்றும் மோதல்   சிறப்பு கட்டுரை

காங்கிரஸ் அல்லாத ஒரு புதிய எதிர்க்கட்சி கூட்டணியை அமைப்பது குறித்து மம்தா பானர்ஜி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால், இண்டி கூட்டணி சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பை பார்க்கலாம்.

பாஜகவை தனித்து தோற்கடிக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்த காங்கிரஸ் , எதிர்கட்சிகளுடன் இணைந்து, இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என்று இண்டி கூட்டணியை உருவாக்கியது.

Advertisement

இண்டி கூட்டணியை உருவாக்கிய போதே அந்த கூட்டணியின் தலைவர் யார் ? கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் ? என்ற கேள்விகள் எழுந்தது. மல்லிகார்ஜுன கார்கே அந்த கூட்டணியின் தலைவராக இருந்த போதும், பல மாநிலங்களில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இண்டி கூட்டணிக்கு விதை போட்ட பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முதல் ஆளாக, கூட்டணியில் இருந்து விலகி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தது. நாடாளுமன்றத்தில் 99 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றியது. நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக, மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளது.

Advertisement

இந்நிலையில், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில், அவையில், பிரதமர் மோடியின் அரசை குறை சொல்லி, அவையை முடக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. ஆனால், அதற்காக பின்பற்ற வேண்டிய உத்தியில் இண்டி கூட்டணி கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, அதானி மீதான குற்றப்பத்திரிகை விவகாரத்தில் விவாதம் நடத்தக் கோரி, அவையை முடக்கியது.

அதானி பிரச்சனை அர்த்தமற்றது என்றும் அதனால் மக்களுக்கு என்ன பயன் ? என்று மம்தா, ராகுலுக்கு பதிலளித்தார். மேலும், ராகுலுக்கு நேர் எதிராக, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற முக்கிய மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அவையை முறையாக நடக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.

மேலும், காங்கிரஸை அடுத்து நாடாளுமன்றத்தில் பெரிய எதிர்கட்சிகளான, மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியின் உறுப்பினர்கள், அதானி விவகாரத்தில் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும், மக்களவையில் வீர் சாவர்க்கரை ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் தாக்கியது, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

இண்டி கூட்டணிக்குள் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு ராகுல் காந்தியின் செயல்பாடுகளே காரணம் என்று கூறப்படுகிறது. பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தி மற்றும் அரியானா, ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் மகாராஷ்டிராவில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விகள் காரணமாக இந்தியா கூட்டணிக்குள் ராகுலுக்கு எதிரான குரல்கள் கேட்கின்றன. கூடவே, இந்தியா கூட்டணியின் தலைமை மாற்றம் பற்றிய கருத்துக்களும் வெளிவருகின்றன.

கடந்த வாரம், மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியின் செயல்பாடுகளில் தனக்கு அதிருப்தி இருப்பதாக கூறிய மம்தா பானர்ஜி, முன்னின்று இந்தியா கூட்டணியைத் தான் உருவாக்கியதாகவும் இப்போது, ​​பொறுப்பில் இருப்பவர்கள் கூட்டணியை சரியாக நடத்தவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

எதிர்க்கட்சிகள் கூட்டணியைக் காங்கிரசால் நடத்த முடியவில்லை என்றால், இந்தியா கூட்டணிக்குத் தாம் தலைமை ஏற்கவும் தயாராக உள்ளதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் வெளிப்படையாக மம்தா பானர்ஜியை ஆதரித்துள்ளனர். நாட்டின் முக்கியமான தலைவர் மம்தா என்று சொன்ன சரத் பவார், இந்தியா கூட்டணியை வழிநடத்தும் திறமையும் அவருக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜியை ஆதரிப்பதாகவும் , இண்டி கூட்டணி தலைவராக மம்தா வர காங்கிரஸ் அனுமதிக்க வேண்டும் என்றும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் குறிப்பிட்டிருக்கிறார்.

நீண்டகால அரசியல் மற்றும் தேர்தல் அனுபவம் உள்ள மம்தா பானர்ஜி, இண்டி கூட்டணிக்கு தலைமை தாங்கி, வழிநடத்த வேண்டும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் தெரிவித்துள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை எம்பியுமான ராம் கோபால் யாதவ், தேர்தல்களில் ஒன்றாக வெற்றிபெற வேண்டும் என்றும் அதற்கான வழியை காண வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஏற்கெனவே, கடந்த மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே காங்கிரசுக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன.

தனது தலைமையின் கீழ், இந்தியா கூட்டணி தோல்வியடைந்துள்ளது என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும் என்றும், பழைய பெரிய கட்சி என்ற தனது ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு, மம்தா பானர்ஜியை எதிர்க்கட்சிகள் கூட்டணித் தலைவராக ராகுல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பல இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதற்கிடையே, இந்தியா கூட்டணித் தலைவராக, தம்மை ஆதரித்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து இது ஒரு நல்ல நகைச் சுவை என்று காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது. எனினும் மம்தாவா ? ராகுலா ? என்ற கேள்விக்கு, மம்தா என்ற குரலே அதிகம் கேட்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ராகுல் மீதான நம்பிக்கை முற்றிலுமாக குறைந்து விட்டது என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement
Tags :
Advertisement