சிவில் சர்வீஸ் தேர்வை எதிர்கொள்வது எப்படி ? அண்ணாமலை விளக்கம்!
சிவில் சர்வீஸ் தேர்வை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "இன்றைய தினம் கோயம்புத்தூரில், தினமலர் நாளிதழ் மற்றும் வஜ்ரம் & ரவி ஐஏஎஸ் சிவில் சர்வீஸஸ் கல்வி நிறுவனம் சார்பில் நடைபெற்ற, ‘நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ்’ நிகழ்ச்சியில், தமிழகக் காவல்துறையின் முன்னாள் டிஜிபி . M.ரவி ஐபிஎஸ் , வருமானவரித் துறை கமிஷனர் . வி.நந்தகுமார் ஐஆர்எஸ் , சிவில் சர்வீஸஸ் பயிற்சியாளர். ஸ்ரீவத்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உரையாடும் வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. சிவில் சர்வீஸஸ் அதிகாரிகள், நமது இந்திய ஜனநாயகத்தின் காவலர்கள்.
பாகுபாடின்றி செயல்படுபவர்கள். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மத்திய மாநில அரசுகளின் திட்டங்களைச் செயல்படுத்தும் முழுமையான அதிகாரம் பெற்றிருப்பவர்கள். இந்தத் தேர்வுக்குத் தயாராகும் மாணவ, மாணவியருக்கு, அடுத்த 30 ஆண்டுகள் நாட்டை எப்படிக் கட்டமைக்க வேண்டும் என்பதுதான் முக்கியப் பணியாக இருக்கும். எனவே அதற்காகத் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
சிவில் சர்வீஸஸ் தேர்வுக்குத் தயாராவது என்பது ஒரு புனிதப் பயணம். தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். தேர்வு முடிவுகளைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. சிவில் சர்வீஸஸ் தேர்வுகளில், தோல்வி என்பதே கிடையாது. இந்தத் தேர்வுகளுக்காகத் தயார் செய்து கொள்வது, சமூகத்தில் ஒரு சிறந்த மனிதனாக நம்மை மாற்றும்.
தேர்வு முடிவுகள் சாதகமாக வரவில்லை என்றாலும், மேலும் பல உயரங்களுக்குச் செல்லும் அறிவையும், வாய்ப்புகளையும், நமது அர்ப்பணிப்பு வழங்கும். எனவே எந்த தடுமாற்றமும், கவனச் சிதறலும் இல்லாமல், முழுமையாகப் படிக்க வேண்டும். சிவில் சர்வீஸஸ் தேர்வுக்குத் தயாராகும் முடிவெடுத்தாலே வெற்றி பெற்று விட்டதாகத்தான் அர்த்தம்.
முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றாலே பிற அரசுப் பணிகளுக்கான வேலைவாய்ப்புகள் தற்போது வழங்கப்படுகின்றன. எனவே இந்தப் படிப்பு வீணாகாது. கிடைக்கவில்லையென்றால் இன்னும் சிறப்பான வாய்ப்பு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் நமது நாட்டின் வளர்ச்சியில் என்ன பங்கினை வகிக்கப் போகிறோம் என்பதற்கான தேர்வுதான், இந்த சிவில் சர்வீஸஸ் தேர்வுகள்.
எனவே மாணவர்கள், அதற்கேற்ப, இப்போதிலிருந்தே தயாராக வேண்டும். உண்மையான அர்ப்பணிப்புடன், உறுதியுடன், தேர்வுக்குத் தயார் செய்தால், நிச்சயம் வெற்றி பெற முடியும். சாதிக்க முடியும்.
நாட்டின் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், சிவில் சர்வீஸஸ் தேர்வுகளுக்காகத் தங்களைத் தயார் செய்து கொள்ளும் மாணவ, மாணவியருக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் ஆண்டுகளில், நமது நாட்டின் வளர்ச்சி, உங்கள் கைகளில்தான்" என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.