சி-295 விமான வசதிகள் என்ன? : இந்தியா உருவாக்கும் முதல் ராணுவ விமானம்!
இந்திய விமானப் படையில் தற்போது உள்ள Avro-748 ஏவ்ரோ ரக விமானங்களுக்கு மாற்றாக சி-295 ஏர்பஸ் விமானங்களை இந்தியா பயன்படுத்தவுள்ளது. இந்த விமானங்களை, ஏர்பஸ் நிறுவனத்துடன் சேர்ந்து டாடா தயாரிக்க உள்ளது. புதிய C295 ராணுவ விமானத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
2021ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில், இந்தியாவுக்கு 56 சி-295 விமானங்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஸ்பெயினின் ஏர்பஸ் டிஃபென்ஸ் மற்றும் ஸ்பேஸ் எஸ்ஏ நிறுவனம் கையெழுத்திட்டது. 21,935 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின்படி , 16 சி-295 ரக விமானங்களை ஏர்பஸ் நிறுவனம் நேரடியாக வழங்குகிறது. மீதமுள்ள 40, சி-295 ரக விமானங்களை டாடா நிறுவனம் தயாரிக்கிறது.
சி-295 ஏர்பஸ் விமான உற்பத்தி தொழிற்சாலை, குஜராத்தில் உள்ள வதேராவில் உள்ள டாடா அட்வான்ஸடு சிஸ்டம்ஸ் வளாகத்தில் உள்ளது. டாடாவின் இந்த ராணுவ விமான தொழிற்சாலைக்கு , கடந்த 2022 ஆம் ஆண்டு, அக்டோபரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த தொழிற்சாலையில் ஏர்பஸ் நிறுவனமும், டாடா குழுமமும் இணைந்து விமானங்களை தயாரிக்க உள்ளன. ஏர்பஸ் நிறுவனமும், டாடா குழுமமும் இணைந்து விமானங்களைத் தயாரிக்க உள்ளன.
கடந்த ஆண்டு மே மாதம், இந்தியாவுக்காகத் தயாரிக்கப்பட்ட ஏர்பஸ் சி-295 முதல் விமானத்தின் வெள்ளோட்ட நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் குஜராத் வதோதராவில் சி295 ராணுவ போக்குவரத்து விமானங்களைத் தயாரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட புதிய வசதியை திறந்து வைத்தனர். ராணுவ விமான உற்பத்தி, பரிசோதனை, பராமரிப்பு உள்ளிட்ட அனைத்தும் குஜராத்தில் உள்ள இந்த டாடாவின் தொழிற்சாலையிலேயே மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படைக்கு 40 மற்றும் கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு 12 என மொத்தம் 52 விமானங்களை தயாரிக்கும் வசதி டாடா தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்குள், டாடாவின் முதல் ராணுவ ஏர்பஸ் ராணுவ விமானம் உற்பத்தியாகும் என்று கூறப்பட்டுள்ளது. 2031ம் ஆண்டுக்குள், மீதமுள்ள 39 ராணுவ விமானங்களும், இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
C-295 விமானம், துருப்பு மற்றும் சரக்கு போக்குவரத்து, கடல் ரோந்து, கண்காணிப்பு, உளவு, சிக்னல்கள் உளவுத்துறை, மருத்துவ வெளியேற்றம், விஐபி போக்குவரத்து மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும்,பேரிடர் நிவாரணம், தேடுதல் மற்றும் மீட்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும் இந்த விமானம் பயன்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
சி -295 ரக விமானம் என்பது 5 முதல் 10 டன் எடைகளை கையாளும் திறன் கொண்ட ஒரு போக்குவரத்து விமானமாகும். சி-295 ரக விமானம், இரண்டு பிராட் & விட்னி கனடா PW127G டர்போபிராப் என்ஜின்களால் இயக்கப்படுகிறது. சி-295 ரக விமானம், 11 மணிநேரம் வரை தொடர்ந்து பறப்பதற்கான திறனைக் கொண்டதாகும். சி-295 ரக விமானம் ஒரே நேரத்தில், 71 துருப்புக்கள் வரை பயணிக்க முடியும். சி-295 ரக விமானம் அதிகபட்சமாக 260 knots பயண வேகத்தில் செல்லக் கூடியதாகும். சி-295 ரக விமானம் காற்றில் இருந்து ஆகாயத்தில் எரிபொருள் நிரப்பும் வசதி கொண்டதாகும். குறுகிய டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் (STOL) செயல்திறன் கொண்ட சி-295 ரக விமானம், 30,000 அடி உயரத்தில் பறக்க கூடியதாகும்.
சரக்குகளை பாரா-ட்ராப்பிங் மூலம் தரையிறக்க வசதியாக சி -295 விமானத்தின் பின்புறத்தில் சாய்வு கதவு இருக்கிறது. உள்ளிழுக்கக்கூடிய தரையிறங்கும் கியர் உடைய இந்த சி-295 ரக விமானத்தில், 12.69-மீட்டர் நீளமுள்ள அழுத்தப்பட்ட அறை அமைக்கப்பட்டிருக்கிறது. எப்படி பட்ட இக்கட்டான வானிலை சூழலிலும் இந்த சி-295 ரக விமானத்தைப் பயன்படுத்த முடியும். சி-295 ரக விமானத்தைப் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட பாலைவனம் முதல் கடல் சூழல் வரை போர்ப் பணிகளில் ஈடுபடுத்த முடியும்.
காக்பிட் கவசம், சாஃப்/ஃப்ளேர் டிஸ்பென்சர்கள் மற்றும் ரேடார், ஏவுகணைகள் மற்றும் லேசர்களுக்கான எச்சரிக்கை அமைப்புகளை உள்ளடக்கியதாக இந்த சி-295 ரக விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் எளிதாக மறுகட்டமைக்கும் வசதியும் இந்த விமானத்தில் உள்ளது.
இத்தனை நவீன வசதிகள் கொண்ட, இந்த சி-295 ரக விமானங்கள், மற்ற பெயர் பெற்ற ராணுவப் போக்குவரத்து விமானங்களுடன் ஒப்பிடும்போது மிக குறைந்த செயல்பாட்டு மற்றும் பராமரிப்புச் செலவுகள் கொண்டதாகும்.
ராணுவ விமானங்களைத் தயாரிப்பதில் இந்தியாவின் முதல் தனியார் துறை நிறுவனமாக டாடா திகழ்வது குறிப்பிடத்தக்கது.