சீனா வேண்டாம் ; உதிரிபாக உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றிய ஆப்பிள் - சிறப்பு கட்டுரை!
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது உற்பத்திக்காக சீனாவை நம்பி இருந்தது. இந்நிலையில், தனது உதிரிபாக உற்பத்தியை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை ஆப்பிள் முடுக்கிவிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உதிரி பாக உற்பத்தியைத் தொடங்குவதற்கான காரணங்கள் என்ன? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தி பயணத்தை 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கியது, முதன்முதலில் ஐபோன் SE உற்பத்தியை இந்தியாவில் தொடங்கியது ஆப்பிள் நிறுவனம். ஆரம்பத்தில், ஆப்பிள் நிறுவனம் உள்நாட்டு சந்தைக்கு ஐபோன்களை அசெம்பிள் செய்தது.
சீனாவின் ஃபாக்ஸ்கான் ஆப்பிளின் மிகப்பெரிய ஒப்பந்ததாரர் ஆகும். ஆப்பிளின் ஐபோன்களில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் ஃபாக்ஸ்கான் நிறுவனமே உற்பத்தி செய்து வந்தது. கொரொனா காலத்தில், எதிர்பாராத விதமாக சீனாவில், ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை மூடப்பட்டது. இதனால், உலகளாவிய ஐபோன் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த சூழலில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்தது.
2021 ஆம் ஆண்டு, ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது. தொடர்ந்து இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்து வருகிறது.
2022 ஆம் ஆண்டில், ஆப்பிள் இந்தியா கிட்டத்தட்ட 15 மில்லியன் ஐபோன்களை உற்பத்தி செய்தது. 2023 ஆம் ஆண்டில், ஐபோன்கள் உற்பத்தி 25 மில்லியனாக அதிகரித்தது. உற்பத்தி செய்யப்பட்ட மொத்த ஐபோன்களில் இது சுமார் 12 சதவீதமாகும்.
ஆப்பிள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஐபோன்களை உற்பத்தி செய்கிறது. 2024 ஆண்டில் சுமார் 18 மில்லியன் ஐபோன்களை ஆப்பிள் இந்தியா உற்பத்தி செய்தது. மேலும் அடுத்த ஆண்டுக்குள் 23 சதவீதமாக உயரும் என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனங்கள் கணித்துள்ளன. இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஆப்பிள் ஐபோன் ஏற்றுமதியும்,12.1 பில்லியனாக உயர்ந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் ஃபாக்ஸ்கான் தொடங்கப்பட்டது. கர்நாடகாவில் 600 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் ஒரு ஆலையும், தெலுங்கானாவில் 500 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் ஒரு ஆலையும் டாடா குழுமத்தால் தொடங்கப் பட்டன. ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய மூன்று இந்திய உற்பத்தி மற்றும் விற்பனையாளராக Foxconn Hon Hai, Pegatron மற்றும் Wistron உள்ளன.
கடந்த ஆண்டு ஃபாக்ஸ்கானில் ஐபோன் 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய ஐபோன் மாடல்கள் உற்பத்தி செய்யப்பட்டன. மொத்த உற்பத்தியில் 58 சதவீதம் ஏற்றுமதி செய்யப் பட்டன. மீதமுள்ளவை உள்நாட்டில் விற்கப்பட்டன. பெகாட்ரான் மற்றும் விஸ்ட்ரான் முறையே தங்கள் உற்பத்தியில் 80 சதவீத மற்றும் 96 சதவீத ஐபோன்களை ஏற்றுமதி செய்தன. தற்போது ஆப்பிளின் முதன்மை மாடல்களான ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆப்பிளின் உலகளாவிய விநியோகச் சங்கிலியின் முக்கிய அங்கமாக இந்தியா மாறியுள்ளது. ஆப்பிள் இந்தியா அடுத்த 2 ஆண்டுகளில் தன் உலகளாவிய ஐபோன் உற்பத்தி அளவின் 32 சதவீதத்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக,ஐபோன்கள், மேக்புக்ஸ், ஐபாட்கள் மற்றும் ஏர்போட்கள் போன்ற சாதனங்களுக்கான முக்கிய உத்தி பாகங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆப்பிள் முடிவெடுத்துள்ளது. உற்பத்தியை மேம்படுத்துவதற்காக ஆப்பிள் இந்தியா அதிகளவில் இந்திய தயாரிப்பாளர்களை நம்பியுள்ளது.
டிக்சன் டெக்னாலஜிஸ், ஆம்பர் எலக்ட்ரானிக்ஸ், ஹெச்சிஎல்டெக், விப்ரோ மற்றும் மதர்சன் குரூப் போன்ற 40க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் கூட்டுசேர்ந்துள்ளது.
இந்தியா-சீனா உறவுகள் சரியாக இல்லாத நிலையில், பல சீன நிறுவனங்களுக்கு இந்தியாவில் வரித் தடைகள் ஏற்பட்டுள்ளன. எனவே, அவை இந்தியாவில் முதலீடு செய்யத் தயங்கின. உதாரணமாக, ஐபாட் உற்பத்திக்கான BYD என்ற சீன நிறுவனத்துக்கு இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய சந்தையில் மாற்று வழிகளைத் தேட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம்
சீனாவில் இருந்து விலகி வரும் நிலையில், கடந்த ஆண்டில் இந்திய சந்தையில் தனது உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையை 48 இல் இருந்து 52 ஆக ஆப்பிள் நிறுவனம் அதிகரித்துள்ளது.
நாட்டில் ஐபோன் உற்பத்தியாளர்கள் அதிகரித்து வருவதால், 2025 நிதியாண்டின் இறுதிக்குள் இந்தியாவில் 6 லட்சம் வேலை வாய்ப்புகளை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் ஆப்பிளின் நேரடிப் பணியாளர்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 200,000 எட்டும் என்றும் அதில் 70 சதவீதம் பெண்கள் பணிபுரிவார்கள் என்றும் கூறப்படுகிறது.