சீரான நீர்வரத்து - குற்றாலம், கும்பக்கரை அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!
குற்றாலத்தில் முக்கிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் நீராட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் நீராட தடை விதிக்கப்பட்டது.
தற்போது வரை, மெயின் அருவியில் நீர்வரத்து சீராகாத நிலையில், 3-வது நாளாக இன்றும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் நீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் கும்பக்கரை அருவியில் 4 நாட்களுக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் நீராட வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக, கடந்த 18 -ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் நீராட வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில், அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு மற்றும் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆகியவை குறைந்ததால் வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனால், சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் நீராடி மகிழ்ந்தனர்.