சுகாதாரம் என்பது தேசத்தின் பணி - ஜி20 கூட்டமைப்பில் சுகாதாரத் துறை அமைச்சர்!
சுகாதார அமைச்சர்களுக்கான ஜி 20 கூட்டமைப்பு கடந்த 17 -ஆம் முதல் 19-ஆம் தேதி வரை குஜராத்தில் உள்ள காந்திநகரில் நடைபெற்றது.
இதில் 'இந்திய தொழில்துறை' நிகழ்ச்சியில் பேசிய, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "சுகாதாரம் என்பது துறை மட்டுமல்ல - இது ஒரு பணி.
இது நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மிக உயர்ந்த தரமான சுகாதாரத்தை வழங்குவதற்கான நோக்கம் கொண்டது. இந்தப் பணியில் எங்களின் மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் துறை ஒரு முக்கிய பங்குதாரராக உள்ளது.
இந்தியா ஒரு உலகளாவிய மருந்து மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, சுகாதாரத்தை மேம்படுத்தவும் உலக அளவில் குறைந்த விலையில் உயர்தரம் வாய்ந்த மருந்துகளை வழங்கும் சேவையை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் உலக அளவில் ஏறக்குறைய 60 சதவீதம் தடுப்பூசிகள் மற்றும் 20 முதல் 22 சதவீதம் பொதுவான மருந்துகளை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில், எங்கள் சுகாதாரத்தில் மாற்றத்தை நாங்கள் கண்டோம். சுகாதாரத்தின் தரம், அணுகுமுறை மற்றும் மலிவு விலையில் கவனம் செலுத்துகிறது," என்று அவர் கூறினார்.
இந்தக் கூட்டமைப்பின் தொழில் தொடர்புக் கூட்டத்தில் இந்தோனேஷியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் கலந்து கொண்டன.
இந்நிலையில், இந்தோனேஷியாவின் சுகாதாரத் துறை அமைச்சர், கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவ உதவிகள் வழங்கி இந்தோனேசியாவுக்கு இந்தியா ஆதரவளித்ததற்காகப் பாராட்டினார்.
இது குறித்து, அவர் கூறுகையில், "நான் இந்தியாவிற்கும் அதன் மத்திய சுகாதார அமைச்சரான மன்சூக் மாண்டவியாவிற்கும் எங்கள் வாழ்க்கையைப் பாதுகாத்து தந்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன். நாங்கள் இந்தியாவுக்கு எதிராக இருந்தோம். ஆனால் இந்தியா எங்களுக்கு மருத்துவ உதவிகள் செய்திருக்கிறது. " என்று தெரிவித்தார்.