சுமார் 15 மணி கொட்டி தீர்த்த மழை - தனித்தீவாக மாறிய ஊத்தங்கரை!
ஃபெஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து 15 மணி நேரத்திற்கு மேல் பெய்த கனமழையால் ஊத்தங்கரை பகுதி தனித்தீவாக மாறியுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகம் - புதுச்சேரியிடையே கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால், அங்குள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வெள்ளம் கரைபுரண்டோடியது.
இதனால் காமராஜர் நகர், அண்ணா நகர் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. ஊத்தங்கரையில் 50 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர் மழையால் அங்குள்ள பரசனேரி முழுமையாக நிரம்பி சேலம் - திருப்பத்தூர் சாலை வழியே, முழங்கால் அளவுக்கு தண்ணீர் வெளியேறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதேபோல, முனியப்பன் கோயில் அருகேள மேம்பாலத்தின் மீது 2 அடிக்கும் மேல் தண்ணீர் செல்வதால் ஊத்தங்கரை - கிருஷ்ணகிரி சாலையும், பல கிராம சாலைகளும் முழுமையாக துண்டிக்கப்பட்டன. இதனால் ஊத்தங்கரை பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டு தனித்தீவாக மாறியதால், அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். மேலும், நெடுஞ்சாலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான டிராவல்ஸ் வாகனங்கள் மற்றும் கார்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.