சூப்பர் பவர் இந்தியா : சூரிய மின் உற்பத்தியில் உலகில் மூன்றாம் இடம்!
உலகளவில் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி மூலம் அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து இந்தியா புது சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், உலகளாவிய மின்சார உற்பத்தியில் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி, இந்தியா சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
உள்கட்டமைப்பின் மிக முக்கிய கூறுகளில் மின்சாரம் ஒன்றாகும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்கும் மிக முக்கியமானதாகும். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துவரும் இந்தியா, போதுமான மின்சார உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
மலிவு விலையில் தடையற்ற மின்சார வழங்குவதற்காக, நாடு முழுவதும் ஒன்றிணைந்த மின் விநியோக வலையமைப்பு மற்றும் ஒற்றை தேசியமின் இணைப்பை உருவாக்குதல் என மத்திய மின்துறை அமைச்சகம் தீவிரமாகச் செயலாற்றி வருகிறது.
நாட்டின் மின்சார தேவை வேகமாக அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் 500 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை ஏற்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக, இந்தியா 9.15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு,தேசிய மின் கட்டமைப்பை வலுப்படுத்துவதையும், எரிசக்தி பாதுகாப்பை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டுக்கான உலகளாவிய மின் உற்பத்தி பற்றிய அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது. உலக எரிசக்தி சிந்தனைக் குழுவான Ember's Global Electricity Reviews ((எம்பரின் குளோபல் எலக்ட்ரிசிட்டி ரிவியூவின்)) ஆறாவது அறிக்கையாகும்.
உலகளாவிய மின்சார தேவையில் 93 சதவீதத்தை 88 நாடுகளே உற்பத்தி செய்கிறது. இந்த நாடுகளின் மின் உற்பத்தி மற்றும் 215 நாடுகளுக்கான வரலாற்றுத் தரவுகளையும் இந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு, உலகளாவிய மின்சார உற்பத்தியில் 15 சதவீத மின்சாரம், காற்றாலை மற்றும் சூரிய சக்தி போன்ற பசுமை ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது. அதில், இந்தியாவின் பங்கு 10 சதவீதமாகும்.
மேலும், உலக மின்சார உற்பத்தியில், 40.9 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் அணுசக்தி உள்ளிட்ட குறைந்த கார்பன் மூலங்கள் கிடைத்துள்ளன என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. உலக மின்சார உற்பத்தி 85 ஆண்டுகளுக்குப் பிறகு 40 சதவீதத்தை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.
உலகளவில் 858 டெராவாட் மணிநேரங்கள் புதுப்பிக்கத்தக்க(Renewable) ஆற்றலால் உற்பத்தி செய்யப்பட்டது. இது கடந்த 2022ஆம் ஆண்டை விட 49 சதவீதம் அதிகமாகும். இந்தியாவில் மொத்த மின் உற்பத்தியில் சுமார் 22 சதவீதம் சுத்தமான எரிசக்தி மூலம் கிடைத்துள்ளது. இதில் நீர் மின்சாரம் 8 சதவீதத்துடன் அதிக பங்களிப்பை அளித்துள்ளது. அதே நேரத்தில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் கிடைத்த மின்சாரத்தின் பங்கு 10 சதவீதமாகும்.
உலகளவில் கடந்த மூன்று ஆண்டுகளில் சூரிய மின் உற்பத்தி இருமடங்கு அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டில் மட்டும் 474 TWh மின் சக்தி சூரிய சக்தியில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா 24 ஜிகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்தியாவின் 7 சதவீத மின் உற்பத்தி சூரிய சக்தி மூலமாகக் கிடைக்கிறது. இதன் மூலம் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியா மூன்றாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது.
உலகளாவிய ஆற்றல் மாற்றத்தின் முக்கிய சக்தியாகச் சூரிய சக்தி மாறியுள்ளது. உலகில் மின்சாரத் தேவையும் அதிகரித்து வருகிறது. உலகளாவிய மின்சார தேவையைப் பூர்த்தி செய்வதில் சூரிய மின்சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சூரிய சக்தி மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சார உற்பத்தி என்பது ஆசியாவில் சுத்தமான எரிசக்தி மாற்றத்தை வேகப்படுத்தியுள்ளது. குறிப்பாகப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வளர்ச்சியில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
இந்தியாவை "சூரிய சக்தி சூப்பர் பவர்" என கூறியுள்ள (Climate change leader) காலநிலை மாற்றத் தலைவர் சைமன் ஸ்டீல், பசுமை ஆற்றல் வளர்ச்சியில் இந்தியா முழுமையாக ஈடுபடுவதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.