சூரிய கண்காணிப்பு செயற்கைக்கோள் புரோபா - 3, அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தகவல்!
இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து தயாரித்த சூரிய கண்காணிப்பு செயற்கைக்கோளான புரோபா - 3, அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்வதற்காக அதித்யா எல்-1 என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் ஹாலோ சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக பயணித்து பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய யூனியனின் விண்வெளி விஞ்ஞானிகள் கூட்டாக சேர்ந்து, சூரியனின் வளிமண்டலத்தை கண்காணிக்க புரோபா - 3 என்ற பெரிய செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளனர்.
இந்த செயற்கைக்கோள் கடந்த 5-ம் தேதி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி எக்ஸ்.எல் ரக ராக்கெட் மூலம், அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.