சென்னைக்கு 390 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை ஆய்வு மையம்
சென்னைக்கு கிழக்கு வட கிழக்கே 390 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, படிப்படியாக வடக்கு நோக்கி நகர்ந்தது.
இந்நிலையில், அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு மத்திய வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.
சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 390 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு தெற்கே 430 கிலோ மீட்டர் தொலைவிலும், ஒடிசாவிற்கு தென்-தென்மேற்கில் 610 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு நோக்கி நகரக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.