சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர்வரத்து குறைவு!
சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருவதால் உபரிநீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்ததால், ஏரிகளின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வந்தது. இதனால் பல்வேறு ஏரிகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.
அதன்படி, புழல் ஏரிக்கு 550 கன அடியாகவும், பூண்டி ஏரிக்கு 7 ஆயிரத்து 320 கனஅடியாகவும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஆயிரத்து 700 கன அடியாகவும், சோழவரம் ஏரிக்கு 209 கன அடியாகவும் நீர்வரத்து குறைந்துள்ளது.
இதனால் புழல் ஏரியில் ஆயிரம் கன அடியாகவும், பூண்டி ஏரியில் 8 ஆயிரத்து 527 கன அடியாகவும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3 ஆயிரம் கன அடியாகவும், சோழவரம் ஏரிக்கு 120 கன அடியாகவும் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.