சென்னையில் கொட்டி தீர்த்த மழை - குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!
சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
Advertisement
பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட குமணன்சாவடி எம்ஜிஆர் நகரில் காலை முதல் பெய்து வந்த கனமழை காரணமாக குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியது. இதனால், பொதுமக்கள் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாயம்மாள் தெரு ரயில் நிலைய மேம்பால சாலை, மின்வாரிய அலுவலகம் ஆகிய இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் மற்றும் மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
வடசென்னையில் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் கீழ்ப் பகுதியில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதே போல வியாசர்பாடி சுந்தரம் மேம்பாலம் பகுதியிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றத்தால் புதுச்சேரி சின்ன காலாப்பட்டு பகுதியில் கடற்கரை ஓரம் இருக்கும் தனியார் விடுதிகள் கடல் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தின்கீழ் மழைநீர் தேங்கிக் குளம் போல் காட்சியளித்தது. இதனால் பெருங்களத்தூர் டிடிகே நகரில் இருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொரட்டூர் வடக்கு பிரதான சாலைகளில் ஐந்துக்கும் மேற்பட்ட தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
புயல் காரணமாக சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் பொதுமக்கள் கார்களை பாதுகாப்புக்காக நிறுத்த தொடங்கினர். இதேபோல பள்ளிக்கரணை மேம்பாலத்திலும் மக்கள் வரிசையாக வாகனங்களை அணிவகுத்து நிறுத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீராமானுஜர் அவதரித்த ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தண்ணீர் புகுந்தது. கோயிலின் மேல்தளத்தில் இருந்து விழுந்த தண்ணீர் பிராகார பாதை முழுவதும் தேங்கியதால், பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு நடந்து சென்றனர்.
சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதையில் மழை நீர் சூழ்ந்து குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில், சாக்கடை கழிவுகளுடன் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். கனமழை காரணமாக, தாமரை ஏரி நீர் மற்றும் கழிவு நீர் கலந்து கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், துர்நாற்றம் வீசுவதால், வாகன ஓட்டிகள் சாலையில் கடந்து செல்ல முடியாமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.