சென்னையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் - அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு!
சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மையக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேலிடப் பார்வையாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர்களான தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வரும் பிப்.5-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், அது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன்,மைய குழு கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரன் ஓர் திமுக அனுதாபி என்று முதலமைச்சரே கூறுவது வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறாது என்பதை வெளிப்படுத்துவதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். தமிழக பெண்கள் திமுக ஆட்சியின் மீது நம்பிக்கையை இழந்து விட்டதாகவும் தமிழிசை குற்றம்சாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார். மாநில அரசின் விசாரணையை பாஜக ஏற்கவில்லை என்றும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.