சென்னையில் பெண் காவலரிடம் செயின் பறிப்பு - பைக்கில் வந்த கொள்ளையர்கள் அட்டூழியம்!
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலரிம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலராக பணிபுரியும் இந்திரா, தனது பணியை முடித்துவிட்டு, முடிச்சூர் சாலையில் உள்ள தேவராஜா தெரு வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவரை நோட்டமிட்ட மர்மநபர்கள், இந்திரா கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை சவரன் தங்க சங்கிலியை அறுத்து கொண்டு பைக்கில் தப்பி சென்றனர்.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதனை அறிந்த கொள்ளையர்கள் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் செயின் பறிப்பிற்கு பயன்படுத்திய பைக்கை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் அனைத்து காவல் நிலையத்தைச் சார்ந்த காவலர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடிய வேளையில், தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி உள்ளது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.