சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி டாஸ்மாக் பணியாளர்கள் கைது!
சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆணையரக அலுவலகத்தில் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி டாஸ்மாக் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
Advertisement
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆணையரக அலுவலகத்தில் 100 -க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி பணியாளர்கள் குடும்பத்துடன் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 11 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை மாலை 4 மணிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய மாற்றுத் திறனாளிகள் ஆணையரகம், அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. இதனால், தங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்தனர்.
மேலும், வெளியூர்களில் இருந்து கூடுதலாக ஆதரவாளர்களை போராட்டத்திற்கு அழைத்தனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தக்கோரி மாற்றுத் திறனாளிகள் ஆணையராக அலுவலகம், காவல்துறையிடம் கடிதம் வழங்கியது.
அதன்பேரில், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் கைது செய்யப்பட்டனர்.