சென்னை ஓட்டேரியில் ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்!
திமுக பிரமுகர் கொலை வழக்கு உள்பட பல வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை சென்னை ஓட்டேரியில் போலீசார் சுட்டு பிடித்தனர்.
Advertisement
வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்த அறிவழகன், திமுக பிரமுகர் இளங்கோ கொலை உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவராவார். கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துவந்த இவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், ஓட்டேரி பனந்தோப்பு பகுதியில் ரவுடி அறிவழகன் பதுங்கியிருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். காவல்துறையினர் வருவதை கண்ட அறிவழகன், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அவர்களை நோக்கி சுட்டுள்ளார்.
இதனால் பாதுகாப்பு கருதி அறிவழகனை போலீசார் சுட்டுப் பிடித்தனர். இதில் காயமடைந்த ரவுடி அறிவழகன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரிடமிருந்த துப்பாக்கி, 6 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.