சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் இளைஞர் உயிரிழப்பு - மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு!
சென்னை கிண்டி கருணாநிதி நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
Advertisement
சென்னை கிண்டியிலுள்ள கருணாநிதி நூற்றாண்டு மருத்துவமனையில், பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் வயிற்று வலி காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்டார். விக்னேஷுக்கு பித்தப்பையில் கல் இருந்ததும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்க்க முடியாமல் கிண்டி அரசு மருத்துவமனைக்கு நேற்று அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அவரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்னேஷ் உயிரிழந்ததை அறிந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததே உயிரிழப்பிற்கு காரணமென அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
ஏற்கெனவே தனது தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி கருணாநிதி நூற்றாண்டு அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர், மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்துவிட்டதாகக்கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.