சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் - தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தலை நடத்த தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
Advertisement
சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்து வந்ததால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன், மூத்த பத்திரிகையாளர்கள் 12 பேர் அடங்கிய வழிகாட்டுதல் குழுவை அமைத்து தேர்தல் நடத்த உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து வரும் 15ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கடந்த 25 ஆண்டுகளாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கான தேர்தல் நடத்தப்படவில்லை என்றும், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை ஒரு குழுவினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு தேர்தலை நடத்த விடாமல் தடுத்து வருவதாகவும் வழிக்காட்டுதல் குழு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார்.
இதனை கேட்ட நீதிபதி, தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதால், சென்னை பத்திரிக்கையாளர் மன்ற தேர்தலுக்கு எந்த தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறினார்.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கை திரும்ப பெறுவதாக தெரிவித்ததை அடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.