செயற்கை புல் கால்பந்து திடல் தனியாருக்கு வாடகை விடும் முடிவு - திரும்பப்பெற்றது சென்னை மாநகராட்சி!
சென்னையில் செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விடும் முடிவை திரும்ப பெறுவதாக, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் நிதி சுமையை குறைக்க பல விளையாட்டு திடல்கள் தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில், செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களையும் தனியாருக்கு வாடகைக்கு விட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த திடலில் பயிற்சி பெற ஒரு மணிநேரத்திற்கு 120 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், இதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 93 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த முடிவுக்கு திமுக கூட்டணி கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் எதிரொலியாக, கால்பந்து செயற்கை புல் விளையாட்டு திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விடும் முடிவை, சென்னை மாநகராட்சி நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மேயர் பிரியா, விளையாட்டு திடல்களை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படாது எனவும், பராமரிப்பு செலவினங்களை மாநகராட்சி நிர்வாகமே ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.