செறிவூட்டப்பட்ட அரிசி மீதான ஜி.எஸ்.டி வரி 5 சதவீதமாக குறைப்பு - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
செறிவூட்டப்பட்ட அரிசி மீதான ஜி.எஸ்.டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் நடந்த 55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மருத்துவ காப்பீடு மீதான ஜிஎஸ்டி வரிமாற்றம் குறித்து எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்த அவர், மருத்துவ காப்பீடு தொடர்பாக விவாதிக்க அமைக்கப்பட்ட குழுவுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், அரசு திட்டங்கள் மூலம் இலவசமாக தரப்படும் உணவுகளின் மூலப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், செறிவூட்டப்பட்ட அரிசி மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அதேபோல, மிளகு, உலர் திராட்சை ஆகியவற்றை விவசாயிகளே விற்பனை செய்தால் அதற்கு ஜிஎஸ்டி வரி கிடையாது எனவும் அவர் கூறினார். ஜீன் தெரப்பி சிகிச்சைக்கும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.