சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் யார்? - காவல்துறை விளக்கம்!
நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்ட நபர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள நடிகர் சயீப் அலிகான் வீட்டிற்குள் கடந்த வியாழனன்று நுழைந்த நபர், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்த போலீஸார், அந்த நபரை சத்தீஸ்கரில் கைது செய்தனர். மும்பையில் இருந்து ஹவுரா செல்லும் ஞானேஸ்வரி விரைவு ரயிலில் பயணித்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
அந்நபர் தானேவில் உள்ள மதுபான விடுதியில் பணியாற்றி வந்ததாகவும், போலீஸார் கைது செய்ய முயன்றபோது தனது பெயரை மாற்றி கூறியதாகவும் கூறப்படுகிறது. மேலும், சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதை குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட ஆகாஷிடம், கர் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நபர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுவதாகவும், உரிய ஆவணங்கள் இன்றி அவர் இந்தியாவில் தங்கியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, பாந்திரா துணை ஆணையர் தீக்ஷித் கேதம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்டவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், அவர் இந்தியர் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார்.
கைதான நபரின் பெயர் முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் என்றும், இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறிய பின்னர், அந்நபர் தனது பெயரை விஜய் தாஸ் என மாற்றிக்கொண்டதாகவும் பாந்திரா துணை ஆணையர் கூறினார்.
கொள்ளையடிக்கும் நோக்கத்துடனே அந்நபர் சைஃப் அலிகானின் வீட்டிற்குள் நுழைந்ததாகவும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.