சைபர் கிரைமில் புது டெக்னிக் : போலி WhatsApp மெசேஜ் மூலம் பணம் பறிப்பு : சிறப்பு தொகுப்பு!
நிர்வாக இயக்குனரின் போலி WhatsApp-லிருந்து தகவல் அனுப்பி, குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து வங்கி 56 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. இந்த சைபர் கிரைம் எப்படி, எங்கு நடந்தது? என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
பெங்களுருவில் வசிக்கும் பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் தலைமை கணக்கு அதிகாரியாக பணி புரிந்து வருகிறார். திடீரென்று, அவருக்கு ஒரு மொபைல் எண்ணிலிருந்து வாட்ஸ்அப் செய்தி வந்தது. அதில் தாம் பணிபுரியும் நிறுவனத்தின் லோகோ மற்றும் MD-ன் படம் இருந்ததால், அந்த செய்தியை நம்பிவிட்டார்.
வந்த செய்தி இது தான். ஒரு திட்டத்தை இறுதி செய்துள்ளதாகவும், அதற்கான பாதுகாப்பு வைப்புத் தொகையாக 56 லட்சத்தை செலுத்த வேண்டும் என்றும் நிறுவன MD தெரிவித்திருந்தார்.
இந்த வாட்ஸ்அப் செய்தி உண்மையானது என்று நம்பி, அனுப்பியவர் வழங்கிய இரண்டு வங்கி கணக்குகளுக்கு 56 லட்சத்தை மாற்றியுள்ளார் அந்த பெண். பரிவர்த்தனையை முடித்த பிறகு, சந்தேகங்கள் எழுந்ததால், MD-க்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். MD அந்த மொபைல் எண் தன்னுடையது இல்லை என்று சொன்னபோது தான் தான் ஏமாற்றப்பட்டது அனுப்பிரியாவுக்கு புரிந்தது. உடனே பெங்களூருவின் தென்கிழக்கு குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட குமார் கொடுத்த தகவலின் படி, திட்டமிட்டு தனியார் நிறுவனக் கணக்காளரை ஏமாற்றி, 56 லட்சத்தைப் பறித்ததாக 23 வயது பெண் உட்பட 6 பேர் கொண்ட கும்பலை தென்கிழக்கு பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கிரிஷ்மா தலைமையிலான கும்பலின் வழிகாட்டுதலின்படி கணக்கைத் தொடங்கியதை ஒப்புக்கொண்ட குமார், தனது கணக்கில் 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய 15,000 ரூபாய் வரை தந்ததாக தெரிவித்திருக்கிறார்.
விசாரணையில், கடந்த 6 மாதங்களாக இந்த சைபர் மோசடியை நடத்தியதாக குற்றவாளிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட கிரிஷ்மா ரெட்டி, ஒரு பட்டய கணக்காளராகவும் உதவி இயக்குனராகவும், தெலுங்கு திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் பணி புரிந்து வருகிறார். கிரிஷ்மாவிடமிருந்து, விலையுர்ந்த ஆடி ஏ4 கார், மொபைல் போன்கள் மற்றும் 56,000 ரூபாயை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கிரிஷ்மாவின் வங்கி கணக்குகளை முடக்கி, 5 லட்சத்தை மீட்டுள்ளனர். மீதமுள்ள 50 லட்சத்தை மீட்கும் முயற்சிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையம் ஒரு விசித்திரமான இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில் தலைமை நிதி அதிகாரிகளான CFO க்கள் மற்றும் தலைமை கணக்கு அதிகாரிகள் CAOக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. MD யிடம் கிராஸ் செக் செய்யாமல், முதலாளியின் வாட்ஸ்அப் உத்தரவுகளின் அடிப்படையில் நிதியை அனுப்ப கூடாது என்பது தான் இந்த செய்தியின் பாடம் .