சொகுசு விடுதியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 12 இந்தியர்கள்!
ஜார்ஜியாவில் சொகுசு விடுதியில் 12 இந்தியர்கள் சடலமாக கண்டெடுப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்ஜியாவின் மலைப் பகுதியான குடவுரி என்ற இடத்தில் செயல்பட்டு வரும் சொகுசு விடுதி ஒன்றில் இந்திய உணவுகளை பரிமாறும் உணவகம் அமைந்துள்ளது. அங்கு பணியாற்றி வந்த 10க்கும் மேற்பட்ட இந்தியர்கள், அந்த விடுதியின் இரண்டாம் மாடியில் உள்ள அறையில் தங்கி பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில் அந்த அறையிலிருந்து 12 இந்தியர்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த அறையின் அருகே மூடிய அறைக்குள் ஜெனரேட்டர் இருந்துள்ளது.
கடந்த 13ஆம் தேதி இரவு மின் வினியோகம் துண்டிக்கப்பட்டபோது அந்த ஜெனரேட்டர் தானாகவே இயங்கியதாகவும், மின்சாரம் வந்ததும் ஜெனரேட்டரின் இயக்கம் நின்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த இடைப்பட்ட நேரத்தில் வெளியான
கார்பன் மோனாக்சைட் நச்சுப்புகை காரணமாக 12 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும், பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்று ஜார்ஜியோ போலீசார் தெரிவித்துள்ளனர்.