ஜகபர் அலி கொலை விவகாரம் - திருமயம் காவல் ஆய்வாளர் குணசேகரன் சஸ்பெண்ட்!
சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை வழக்கில், திருமயம் காவல் ஆய்வாளர் குணசேகரனை சஸ்பெண்ட் செய்து திருச்சி சரக டிஐஜி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கல்குவாரியில் அதிக அளவு கனிமவளக் கொள்ளை நடப்பதாக சமூக ஆர்வலர் ஜகபல் அலி ஆட்சியரிடம் புகாரளித்தார். இந்த நிலையில் வெளியில் சென்றுவிட்டு வீடி திரும்பிய ஜகபர் அலி லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.
முதலில் திருமயம் போலீசார் இதை விபத்து வழக்காக பதிவு செய்தனர். பின்னர், ஜகபர் அலியின் மனைவி மரியம் உட்பட பலர் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மனு அளித்ததை தொடர்ந்து, விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, ஜகபர் அலி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ஜகபர் அலி கொலை வழக்கை மெத்தனமாக கையாண்ட திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.