ஜமைக்கா சூப்பர் மார்கெட்டில் கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு - தமிழக இளைஞர் பலி!
ஜமைக்கா நாட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நெல்லையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.
மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான ஜமைக்கா நாட்டின் பிராவிடன்ஸ் தீவில், தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவரது சூப்பர் மார்க்கெட்டில் நெல்லையைச் சேர்ந்த விக்னேஷ், சுந்தரபாண்டி, சுடலைமணி மற்றும் ராஜாமணி ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 1.30 மணியளவில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள், அங்கிருந்த விக்னேஷ் உள்ளிட்ட ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதில் படுகாயமடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மேலும் இருவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சூப்பர் மேர்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.