ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு - விமானங்கள் ரத்து!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மோசமான வானிலை மற்றும் கடும் பனிப்பொழிவின் காரணமாக அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான பயண டிக்கெட்டுகளை புதுப்பித்துக் கொள்ள விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளும்படி பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக விமான பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் நெடுஞ்சாலை முழுவதும் பனியால் மூடப்பட்டதால் நக்ரோடா மற்றும் உதம்பூரிலிருந்து, காஷ்மீர் செல்லும் வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. நெடுஞ்சாலையில் இருந்து இயந்திரங்களைக் கொண்டு பனியை அகற்றும் பணியில் அம்மாநில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே பனிப்பொழிவு அதிகரித்ததால், வாகனங்களை பனிக்கட்டிகள் மூடின. டோடா மற்றும் ஆனந்த்நாக் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்ட இடமே தெரியாமல், பனிக்கட்டிகளால் சூழப்பட்டன. இதைத்தொடர்ந்து பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். ஜெசிபி இயந்திரமும் பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.