நாமக்கல் பொன்னேரி ஜல்லிக்கட்டு - தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது மக்களின் பாதுகாப்பை அரசே கவனித்துக் கொள்ளும் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், நாமக்கல் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
நாமக்கல் மாவட்டம், பொன்னேரி கிராமத்தில் அரசின் விதிகளை மீறி அறிவிக்கப்படாத இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு திருவிழாவிற்காக அரசாணை வெளியிட்டு, 800 மாடுகள், 400 வீரர்கள் அதில் கலந்து கொண்டுள்ளனர் என தெரிவித்தனர்.
இத்தகைய ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது மக்களின் பாதுகாப்பை அரசே கவனித்துக் கொள்ளும் என குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரரின் நோக்கம் ஜல்லிக்கட்டை நிறுத்துவது போல் உள்ளது என கூறினர்.
மேலும், விளையாட்டை விளையாட்டாக கருத வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் நீதிமன்றம் தலையிட்டு எந்த வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். (OUT)