For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஜான்சி ராணி! : ஆங்கிலேயர்களை விரட்டியடித்த வீர மங்கை!

04:57 PM Nov 19, 2024 IST | Murugesan M
ஜான்சி ராணி    ஆங்கிலேயர்களை  விரட்டியடித்த வீர மங்கை

பெண்தானே எளிதில் அடக்கிவிடலாம் என்று நினைத்த ஆங்கிலேயர்களைத் தீரத்துடன் எதிர்த்து நின்ற வீரமங்கை தான் ஜான்சி ராணி என்று போற்றப் படும் ராணி லட்சுமிபாய். 1857ம் ஆண்டில் இந்திய விடுதலைக்காக நடந்த முதல் போரின் வீரமுடன் போரிட்ட ஜான்சி ராணி பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

இன்றைக்கு வாரணாசி என்று அழைக்கப் படும் காசியில் 1828ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி, கர்ஹடே பிராமண சமூகத்தைச் சேர்ந்த மோரோபந்த் தம்பே-பகீரதி சப்ரே தம்பதிக்கு மகளாகப் பிறந்தார்.

Advertisement

பெற்றோர் வைத்த பெயர் மணிகர்ணிகா தம்பே என்றாலும், குடும்பத்தில் எல்லோரும் 'மனு' என்று செல்லமாக அழைத்தனர்.

நான்கு வயதிலேயே தாயை இழந்த மணிகர்ணிகா, சிறுவயதிலேயே, வாள்வீச்சு, குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் போன்ற வீரக் கலைகளைப் பயின்று, முழுமையான போர் திறன்களைப் பெற்றார்.

Advertisement

1842ம் ஆண்டில், மணிகர்ணிகாவை ஜான்சியின் இளவரசர் கங்காதர ராவ் நெவல்கர் திருமணம் செய்துகொண்டார். அன்றிலிருந்து லட்சுமிபாய் என்று அழைக்கப்பட்டதோடு, ஜான்சியின் ராணியாகவும் ஆனார்.

1851ம் ஆண்டில், ஜான்சி ராஜ தம்பதியருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அதற்கு தாமோதர் ராவ் எனப் பெயர்சூட்டி மகிழ்ந்தனர். எதிர்பாராத விதமாக, நான்கு மாதங்களிலேயே அந்தக் குழந்தை இறந்தது.

பின்னர், ராஜா கங்காதர் ராவின் உறவினரின் மகன் ஆனந்த் ராவை தத்தெடுத்தனர். தாமோதர் ராவ் என்று பெயர் சூட்டி வளர்த்தனர். இந்து மரபின்படி அந்தக் குழந்தை ராஜ தம்பதியரின் சட்ட வாரிசாகவே இருந்தது. திடீரென, 1853, நவம்பர் மாதம் 21 ஆம் தேதி கங்காதர ராவ் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

மன்னரின் மறைவுக்குப் பின், வளர்ப்புமகன் தாமோதர ராவை ஆட்சியில் அமர்த்த ஜான்சிராணி முடிவெடுத்தார்.

ஆனால், தத்துப்பிள்ளையை அதிகாரபூர்வமாக ஏற்க அப்போதைய ஆங்கிலேய ஆளுநர் டல்கௌசி மறுத்தார். ஒரு மன்னருக்கு நேரடி வாரிசு இல்லையென்றால், அந்த அரசு தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி, ஜான்சி கோட்டையைத் தமது ஆட்சிக்கு உட்படுத்த முடிவெடுத்தனர் வெள்ளையர்கள். அதன்படி, 1854ஆம் ஆண்டு, ஜான்சி ராணி லட்சுமிபாய்க்கு 60,000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து, கோட்டையை விட்டு வெளியேற உத்தரவிட்டார்கள்.

ஆங்கிலேயரின் இந்த சதியை எதிர்த்து போராட முடிவு செய்தார் ஜான்சியின் ராணி லட்சுமிபாய். நாட்டைக் காக்க ஜான்சி ராணி, ஆற்றல் மிக்க போர்ப் படையை உருவாக்கினார். அதில் பெண்களுக்கும் போர்ப் பயிற்சி அளித்தார்.

இந்த கால கட்டத்தில், 1857ஆம் ஆண்டு மே 10ம் தேதி, ஆங்கிலேயருக்கு எதிரான மீரட் புரட்சி ஆரம்பமானது. போர் வீரர்களுக்குப் புதிதாக வழங்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளில் பசு மற்றும் பன்றி ஆகியவற்றின் கொழுப்புப் பூசப்பட்டதாகப் பரவிய செய்தியையடுத்தே இந்த சிப்பாய் கலகம் வேகமாக பரவத் தொடங்கியது.

ஜான்சிராணி இலட்சுமிபாய் எந்நேரமும் தம்மை எதிர்க்கக்கூடும் என்ற அச்சத்தால், 1858ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி, ஹீ ரோஸ் தலைமையில் ஆங்கிலேயர்களின் படை ஜான்சியை முற்றுகையிட்டது.

ஆங்கிலேயப் படைகள் வந்து ஜான்சியை ஒப்படைக்க கோரியபோது, லட்சுமிபாய் உறுதியாக மறுத்துவிட்டார்.

தனது நாட்டை விட்டுக் கொடுக்க மறுத்த ஜான்சிராணி இலட்சுமிபாய், தனது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச் சென்று பெரும் ஆற்றலுடனும் மிகுந்த துணிச்சலுடனும் போர் புரிந்தார். கடுமையான போருக்குப் பின், ஆங்கிலேய படையினர், அத்துமீறி ஜான்சி நகருக்குள் நுழைந்தனர்.

கடுங்கோபத்திலிருந்த ஆங்கிலேயர், ஜான்சி அரண்மனைக்குள் புகுந்து விலைமதிப்பற்ற பொன்னையும் பொருளையும் கொள்ளையடித்ததோடு, பெண்களுக்கும் பெரும் இன்னல்கள் விளைவித்தனர். தொடர்ந்து போரிட்ட போதும் 1858-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி இரவு, தனது மகனுடன், பெண் வீரர்கள் கொண்ட பாதுகாப்புப் படையுடன் நகரத்தை விட்டுத் தப்பித்தார் ஜான்சி ராணி.

தப்பித்து சென்ற ஜான்சி ராணி, குவாலியரின் மகாராஜா ஜயாஜிராவ் சிந்தியாவின் படையைத் தோற்கடித்து, குவாலியரின் கோட்டையைக் கைப்பற்றினார்.

குவாலியரைக் கைப்பற்ற முயன்ற ஆங்கிலேயப் படையைத் துணித்து எதிர்த்தார். வீரத்தின் மகாசக்தியாக நின்று போரிட்ட ஜான்சி ராணி, ஒரு கட்டத்தில் போர் களத்தில் படுகாயம் அடைந்து, வீரமரணம் அடைந்தார்.

ஆண் வேடம் அணிந்திருந்ததால், ஜான்சி ராணி இறந்தது ஆங்கிலேயருக்குத் தெரியவில்லை. உடனடியாக, ஜான்சியின் பூல்பாக் என்ற இடத்தில் ஒரு குடிசையோடு ராணியின் படையைச் சார்ந்த ராமச்சந்திரராவால் தகனம் செய்யப்பட்டது.

ஜான்சிக்கு ஆங்கிலேயர்களின் படையை வழி நடத்திய ஹீ ரோஸ், வீரமும் விவேகமும் விடாமுயற்சியும் கொண்ட ஜான்சி ராணி, அனைத்துப் புரட்சித் தலைவர்களிலும் மிகவும் ஆபத்தானவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜான்சி ராணியின் வீரதீரச் செயல்களும், ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட வல்லமையும் , இன்றும் நாட்டுப்புறப் பாடல்களாகவும் நாடகங்களாகவும் போற்றப்படுகின்றன.

இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரராக, இந்தியர்களுக்குச் சுதந்திர வேட்கையை விதைத்த வீரமங்கை ஜான்சி ராணியின் மாவீரத்தைப் போற்றுவோம்.

Advertisement
Tags :
Advertisement