For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

"ஜாம்நகர் "மகாராஜா": UNSUNG ஹீரோ அஜய் ஜடேஜா - சிறப்பு கட்டுரை!

07:00 PM Oct 14, 2024 IST | Murugesan M
 ஜாம்நகர்  மகாராஜா   unsung ஹீரோ அஜய் ஜடேஜா   சிறப்பு கட்டுரை

ஜாம்நகர் அரச பரம்பரையின் வாரிசாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா அறிவிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் வீரராக அறியப்பட்ட அஜய் ஜடேஜாவின் வாழ்க்கைப் பயணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

90-களில் இந்திய கிரிக்கெட்டின் ‘ஸ்மைலிங் ஸ்டார்’ என்று அறியப்பட்டவர்தான் அஜய் ஜடேஜா. அஜய் ஜடேஜா என்றதுமே அந்த கள்ளம் கபடமில்லாத சிரிப்பும், கொஞ்சமும் அலட்டல் இல்லாத நடையும்தான் அனைவருக்கு நினைவுக்கு வரும்.

Advertisement

இந்தியாவின் உள்ளூர் போட்டிகளான ரஞ்சி ட்ராபி, துலிப் ட்ராபி தொடர்களின் பெயர் காரணத்திற்கும், அஜய் ஜடேஜாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அஜய் ஜடேஜாவின் தாத்தாவுடைய தம்பிதான் துலிப்சிங்ஜி. இவருடைய பெயரில்தான் துலிப் ட்ராபி தொடர் நடத்தப்படுகிறது. அந்த துலிப்சிங்ஜியின் உறவினரான ரஞ்சிசிங்ஜி என்பவர் பெயரில்தான் ரஞ்சி ட்ராபி தொடர் நடத்தப்படுகிறது.

அந்த வரிசையில் இந்தியாவுக்கு விளையாட தேர்வான அஜய் ஜடேஜாவும், 1992-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக பல சிறப்பான ஆட்டங்களை கொடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில் அஜய் ஜடேஜா இந்தியாவிற்காக 15 டெஸ்ட் போட்டிகளிலும், 196 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார்.

Advertisement

பீல்டிங் திறமையால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் அஜய் ஜடேஜா. குஜராத்தின் ஒரு சமஸ்தானமான ஜாம்நகர் என்று அழைக்கப்படும் நவாநகரில், அரச குடும்பத்தில் பிறந்தவர் அஜய் ஜடேஜா. அதனால்தானோ என்னவோ அவரிடம் ஒருதுளி பதற்றமும் இருக்காது.

டக் அவுட் ஆனாலும் சரி, சதமடித்தாலும் சரி முகத்தில் அந்த சிரிப்பு மட்டும் எப்போதும் மறைந்ததில்லை. அணியின் தேவையைப் பொறுத்து இவரது அன்றைய ஆட்டம் இருக்குமே தவிற, தனக்கென தனி ஒரு ஸ்டைலை அஜய் ஜடேஜா உருவாக்கிக்கொள்ளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

90-களில் இந்திய அணி பெற்ற குறிப்பிடத்தக்க பல வெற்றிகளில் அஜய் ஜடேஜாவின் பங்கு அளப்பரியது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. தனது கிரிக்கெட் சாதனைகளைத் தாண்டி ஓய்வுபெற்றப் பின்னரும் அஜய் ஜடேஜா கிரிக்கெட் வர்ணனையாளராக, பாலிவுட் திரைப்படங்களில் நடிகராக, தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக என தனது பெயரை மக்கள் மனதில் பதியவைத்துக்கொண்டே இருந்தார்.

இது அவரது பன்முகத்தன்மையை அவரது ரசிகர்களின் மனதில் ஆழப்பதிய வைத்தது. கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியின் வழிகாட்டியாக அஜய் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டது ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது. அவரது வழிகாட்டுதலின் பேரில் ஆப்கானிஸ்தான் அணி பலம்வாய்ந்த இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளை திக்குமுக்காடச் செய்தது அனைவரும் அறிந்ததே.

குஜராத்தின் ஒரு சமஸ்தானமான ஜாம்நகர் என்று அழைக்கப்படும் நவாநகரின் அரச குடும்பத்தில் பிறந்த அஜய் ஜடேஜா, தற்போது அந்த அரச குடும்பத்தின் அடுத்த வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை நவாநகர் மகாராஜா சத்ருசல்யசின்ஹ்ஜி திக்விஜய்சின்ஜி ஜடேஜா (Shatrusalyasinhji Digvijaysinhji Jadeja) கடிதம் ஒன்றின் மூலம் உறுதிபடுத்தியுள்ளார்.

ANI செய்தி நிறுவனத்தில் பகிரப்பட்ட அந்த கடிதத்தில், “அஜய் ஜடேஜா, தனது வாரிசாக மாற ஒப்புக்கொண்டுள்ளார்” என மகாராஜா சத்ருசல்யசின்ஹ்ஜி திக்விஜய்சின்ஜி ஜடேஜா குறிப்பிட்டுள்ளார். பாண்டவர்கள் வனவாசம் முடிந்து திரும்பியதற்காக கொண்டாடப்படும் தசரா பண்டிகை நன்னாளில், தனது அரச குடும்பத்து வாரிசாக மாற அஜய் ஜடேஜா ஒப்புக்கொண்டதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அஜய் ஜடேஜாவின் தந்தை தௌலதசின்ஜி ஜடேஜா ஜாம்நகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானவர். 1979ம் ஆண்டு முதல் 1990 வரை இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக அவர் பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில், அஜய் ஜடேஜா அரசு குடும்பத்து அடுத்த வாரிசாக அறிவிக்கப்பட்டிருப்பது, அவரது தனிப்பட்ட சாதனைகளில் மற்றொரு மைல்கல் என்பதைத்தாண்டி, அவரது குடும்பத்தின் அரசியல் பாரம்பரியத்தின் ஒரு பிரதிபலிப்பாக உள்ளது. இந்திய கிரிக்கெட்டில் ரசிகர்கள் கொண்டாடத்தவறிய வீரர்களில் ஒருவராக அஜய் ஜடேஜா பார்க்கப்பட்டாலும், தற்போது அவர் அடைந்துள்ள உச்சம் அவரை பல தரப்பினரின் வாழ்த்து மழையில் நனையச் செய்துள்ளது என்பதே நிதர்சனம்.

Advertisement
Tags :
Advertisement