ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபரை கைது செய்யாதது ஏன்? அந்த சார் யார்? - ஹெச்.ராஜா கேள்வி!
ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபரை கைது செய்யாதது ஏன்? என தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த குற்றவாளி மீது தமிழக அரசும், காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில துணைத் தலைவர் சகோதரர் திரு.கரு.நாகராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பாஜக நிர்வாகிகள், தொண்டர்களை தமிழக காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி தனக்கு பாலியல் துன்புறுத்தல் இழைத்த குற்றவாளி ஞானசேகரனுடன் இன்னோரு நபர் தொடர்பில் இருந்ததாகவும், Sir ஒருவருடன் நீ இருக்க வேண்டும் என்று ஞானசேகரன் தன்னை மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளி ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபரை காவல்துறை இதுவரை கைது செய்யாதது ஏன்?
மேலும் ஒரு Sir உடன் நீ இருக்க வேண்டும் என ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த Sir யார் என்பதை விசாரித்து அவர் இதற்கு முன்பு ஞானசேகரன் உடன் இணைந்து வேறு பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இழைத்திருக்கிறாரா என்பதை கண்டறிந்து அவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் ஏற்கனவே 15 வழக்குகளில் குற்றவாளி என்றும் ஏற்கனவே ஒரு பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர் என்றும் அவர் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும் ஊடக செய்திகள் மூலமாக தெரிகிறது.
குற்றவாளி ஞானசேகரன் திமுகவை சேர்ந்த அமைச்சர்களோடு இணக்கமாக இருக்கின்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்த போதிலும் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு அறிமுகமான நபர் என்பதால் தானோ என்னவோ இதுவரையிலும் ஞானசேகரனை குண்டர் சட்டத்தின் கீழ் தமிழக காவல்துறை கைது செய்யாமல் அமைதியாகவே இருந்திருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.
மேலும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கும் போது அவர்களின் பாதுகாப்பு கருதி பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை பொதுவெளியில் தகவல் பதிவு செய்யக்கூடாது என்பதே தார்மீக அடிப்படையிலான மரபு.
தற்போது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்துள்ள நிலையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் மாணவியின் முகவரி உள்ளிட்ட விஷயங்களை ஆன்லைனில் உடனடியாக பதிவேற்றம் செய்திருப்பதாக தெரிகிறது.
பாலியல் தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்களை பொதுவெளியில் பகிரக்கூடாது என்கிற தார்மீக கடமையிலிருந்து தமிழக காவல்துறை தவறி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இப்பிரச்சனையை மக்களின் கவனத்திலிருந்து திசைதிருப்ப வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு தான் பாதிக்கப்பட்ட மாணவிக்காக நீதி கேட்டு போராட்டம் நடத்திய பாஜகவினரை காவல்துறை கைது செய்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.
குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்காக பணியாற்ற வேண்டிய தமிழக காவல்துறை திமுக ஆட்சியின் அவலங்களுக்கு எதிராக போராடுபவர்களை ஒடுக்குவதற்காக பணியாற்றுவது ஜனநாயக விரோத செயல்.
நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் குற்றங்கள் நிகழும் மாநிலமாக தமிழகம் திகழ்வதற்கு திமுகவின் திறனற்ற ஆட்சியே காரணம் என்பதை தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் குற்ற நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.
தமிழக காவல்துறை பாலியல் குற்றவாளி ஞானசேகரனின் கூட்டாளியை தேடும் போது அப்படியே தமிழக முதல்வர் ஸ்டாலினின் இரும்புக் கரங்கள் எங்கே இருக்கின்றன என கண்டுபிடித்துத் தந்தால் நன்றாக இருக்கும் என ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.