ஞானசேகரன் சொத்து விவரம் - ஆவணங்களை கேட்டு நோட்டீஸ் அனுப்பிய சிறப்பு புலனாய்வு குழு!
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஞானசேகரனின் சொத்து விவரங்கள் தொடர்பான ஆவணங்களை கேட்டு பத்திரப் பதிவுத்துறை, வருவாய்த் துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
Advertisement
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஞானசேகரன், கோட்டூர்புரம் ஏரிக்கரை தெருவில் 2 மாடியுடன் கூடிய வீடு கட்டி அதில் 2 மனைவிகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டதாக வருவாய்த் துறை ஆய்வில் தகவல் வெளியானது. வீடு கட்டப்பட்ட நிலம் வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சொந்தமானது என்றும், பட்டா இல்லை எனவும் ஆய்வில் தெரியவந்தது.
வாங்க மற்றும் விற்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த இடத்தை ஆக்கிரமித்து ஞானசேகரன் குடும்பத்தினர் வீடு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, கடந்த 2020ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஞானசேகரன் வாங்கிய சொத்துக்கள், தற்போது வசிக்கும் வீடு ஆகியவை குறித்து, பத்திரப் பதிவுத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆவணங்கள் கேட்டு சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேலும், ஞானசேகரனின் வீடு உரிய அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளதா என்பதற்கான ஆவணங்களைக் கேட்டும் சென்னை மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.