டங்ஸ்டன் சுரங்க விவகாரம் - முதல்வர், எதிர்கட்சி தலைவர் காரசார வாக்குவாதம்!
டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையின் 5ம் நாள் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தை திமுக எம்.பி.க்கள் ஏன் எதிர்க்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மாநில உரிமைகளை பறிக்கும் சட்டத்திற்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை தான் ஆதரவு தெரிவித்ததாக கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் எழுதிய கடிதத்தில் ஏலத்திற்கான அனுமதியை தான் கேட்டாரே தவிர, டங்ஸ்டனை ரத்து செய்ய கோரவில்லை என தெரிவித்தார்.
அதேபோல் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் தெரிவித்ததை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, 10 மாத காலம் மத்திய அரசிடம் எதிர்ப்பை பதிவு செய்யாமல் திமுக அரசு என்ன செய்தது என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததற்கான ஆதாரம் இருப்பதாக தெரிவித்தார்.