டங்ஸ்டன் திட்டம் ரத்து: பிரதமர் நரேந்திர மோடிக்கு அண்ணாமலை நன்றி!
டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலத்தை ரத்து செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கடினமாக உழைக்கும் நமது விவசாயிகளின் கோரிக்கையைப் பரிசீலித்து, மதுரை மாவட்டம் மேலூர் பகுதி கிராமங்களில், டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலத்தை ரத்து செய்ததற்காக, மதுரை மேலூர் பகுதி மக்கள் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்யும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமரின் முடிவு, நமது விவசாயிகளின் நலனில் அவர் கொண்டுள்ள அக்கறையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதில், நமது பாசத்திற்குரிய பிரதமர் அவர்கள், சொன்ன சொல்லின்படி நடந்து கொள்வதை எடுத்துக் காட்டியிருக்கிறது.
மதுரை மேலூர் அம்பலக்காரர்கள் மற்றும் விவசாயிகளின் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்து, அவர்கள் கோரிக்கையைப் பரிசீலித்ததற்காக, நமது மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டிக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.