டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!
சேதமடைந்த கருவிழிப் படலத்திற்கு ஊசித்துளை பியூபிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சையளித்து டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
Advertisement
கருவிழி சேதம் அடைந்தால் தானமாகப் பெற்ற கருவிழியைப் பயன்படுத்தி உறுப்புமாற்று சிகிச்சை அளிக்கப்படுவதே வழக்கம். அதற்கு பதிலாக ஊசித்துளை பியூபிலோபிளாஸ்டி என்ற சிகிச்சை முறையை டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது.
முதியவர் ஒருவருக்கு வலது கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாகக் கருவிழி பாதிக்கப்பட்டு பார்வை இழப்பு நேரிட்டது. அவருக்குக் கருவிழி மற்றும் விழிப்படலத்தின் முழு அடர்த்தியைச் சரி செய்யும் சிகிச்சை மேற்கொள்ளவும், சரிந்துள்ள விழியின் உட்புறத் திசுக்களை மீண்டும் சரியாக நிலைநிறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, மருத்துவமனை தலைவர் அமர் அகர்வால் தலைமையில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக ஊசித்துளை பியூபிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து பேட்டியளித்த டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவச் சேவைகளுக்கான பிராந்திய தலைவர் சௌந்தரி, முதியவரின் வலது கண்ணில் காயம் குணமடைந்து வருவதாகவும், அவருக்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.