செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் தமிழகத்திற்கு எந்த முதலீடும் கிடைக்கவில்லை - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

02:25 PM Jan 24, 2025 IST | Sivasubramanian P

டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் தமிழகத்திற்கு எந்த முதலீடும் கிடைக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார மாநாட்டில் ‘வளர்ச்சியில் முன்னேறி பாயும் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டின் குழு கலந்து கொண்ட நிலையில், இன்று வரை தமிழ்நாட்டுக்கு எந்த முதலீடும் கிடைக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இது தமிழ்நாட்டுக்கு பெரும் தோல்வி ஆகும் என தெரிவித்துள்ளார்.

உலகப் பொருளாதார மாநாட்டில் மராட்டிய மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பங்கேற்ற அம்மாநிலக் குழு முதல் 3 நாட்களில் ரூ.15.70 லட்சம் கோடிக்கான முதலீடுகளை ஈர்த்திருக்கிறது. முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமையில் பங்கேற்ற தெலுங்கானா குழுவினர் முதல் மூன்று நாட்களில் ரூ.1.79 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறது. அமேசான் இணைய சேவைகள் நிறுவனம் மட்டுமே ரூ.60 ஆயிரம் கோடி முதலீடு செய்திருக்கிறது என கூறியுள்ளார்.

Advertisement

உலகப் பொருளாதார மாநாடு இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், தமிழகக் குழுவினர் சுமார் 50 சந்திப்புகளை நடத்தியும் முதலீட்டுக்கான எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்றும், இன்றைய நிகழ்வுகளின் போதும் புதிய முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாக வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவின் பிற மாநிலங்கள் எங்களுக்கு போட்டி இல்லை; வெளிநாடுகள் தான் எங்களுக்கு போட்டி என்றெல்லாம் தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து வந்தது. ஆனால், எந்த முதலீடும் கிடைக்கவில்லை என்பதிலிருந்தே முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு எந்த நிலையில் இருப்பதை புரிந்து கொள்ள முடியும். இது தான் திராவிட மாடல் அரசின் சாதனையாகும் என தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலீடுகளை ஈர்க்கும் திறன் தமிழ்நாட்டுக்கு குறைந்து வருகிறது என்பது தான் உண்மை. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் கடந்த முறை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இம்முறை பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள 30 வகையான சீர்திருத்தங்களில் பெரும்பான்மையானவற்றை தமிழக அரசு செய்யவில்லை என்பது தான் இதற்குக் காரணம் ஆகும் என கூறியுள்ளார்.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முதலீடுகள் குவிவதைப் போன்றத் தோற்றத்தை ஏற்படுத்த திமுக அரசு முயன்று வருகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கும் கூடுதலான முதலீடுகள் வந்திருப்பதாக தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. பலமுறை வலியுறுத்தியும் அதை செய்ய திராவிட மாடல் அரசு மறுக்கிறது என தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 4 நாள் பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்ற போது அங்குள்ள நிறுவனங்களிடம் மொத்தம் ரூ.6100 கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அதன்பின் ஸ்பெயின் நாட்டில் ரூ. 3,440 கோடி தொழில் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருந்தார். ஆனால் அந்த நாடுகளில் இருந்து எந்த முதலீடுகளும் இதுவரை வரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வீண் பேச்சுகளையும், வெட்டி விளம்பரங்களையும் செய்வதை விடுத்து வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டில் இருந்து அதிக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு செய்ய வேண்டும்; அதற்கான சூழலை தமிழ்நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Tags :
Davos World Economic Forum.no investment for tamilnadutrp rajaFEATUREDMAINtamilnaduChief Minister Revanth ReddySwitzerlandPMK leader Anbumani RamadossMaharashtra Chief Minister Devendra Fadnavis
Advertisement
Next Article