டிரம்பிடம் தோல்வி : முதல் பெண் அதிபர் வாய்ப்பை பறி கொடுத்த கமலா ஹாரிஸ் - சிறப்பு கட்டுரை!
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்கிய துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிடம் தோல்வியடைந்ததால் முதல் பெண் அதிபராகும் வாய்ப்பை இழந்தார். 60 வயதாகும் கமலா ஹாரிஸ் யார் ? அவரது அரசியல் பயணம் எப்படி இருந்தது என்பதை விளக்குகிறது இந்த சிறப்புத் தொகுப்பு....
இந்தியாவில் பிறந்த தாய் மற்றும் ஜமைக்காவில் பிறந்த தந்தை ஆகிய புலம்பெயர்ந்த பெற்றோருக்கு மகளாக கமலா ஹாரிஸ் 1964ஆம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி கலிஃபோர்னியாவின் ஓக்லாண்டில் பிறந்தார்.
கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமளா கோபாலன், மார்பக புற்றுநோய் ஆராய்ச்சியாளராவார். கமலா ஹாரிஸின் தந்தை டொனால்ட் ஜே. ஹாரிஸ், பொருளாதார பேராசிரியர் ஆவார். பெற்றோர் இருவரும், சிவில் உரிமைகள் இயக்கத்தில் தீவிரமாக இயங்கி வந்தனர்.
கமலா ஹாரிஸுக்கு 5 வயதாகும் போது , அவரது பெற்றோரின் திருமண வாழ்வு முறிந்தது. கமலா ஹாரிஸ் மற்றும் அவரது தங்கை மாயா இருவரும், தாயாரால் வளர்க்கப்பட்டனர். கமலா ஹாரிஸின் சிறுவயது வாழ்க்கை, அவரை அநீதிக்கு எதிராகப் போராடுவதையே தன் வாழ்க்கைப் பணியாக மாற்றியது.
உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு, கமலா ஹாரிஸ் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஹேஸ்டிங்ஸ் கல்லூரியில் படித்து வழக்கறிஞரான கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியாவில் உள்ள பல்வேறு மாவட்ட வழக்கறிஞர் அலுவலகங்களில் பணிபுரிந்தார்.
கமலா ஹாரிஸ் 2003ம் ஆண்டில், சான் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011ம் ஆண்டு, கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக பதவியில் உயர்ந்த கமலா ஹாரிஸ், அட்டர்னி ஜெனரல் பதவி வகித்த முதல் பெண், முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் மற்றும் முதல் தெற்காசிய அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார்.
2016ம் ஆண்டில், கலிபோர்னியாவின் செனட்டராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க வரலாற்றில், செனட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது ஆப்பிரிக்க- அமெரிக்க பெண்மணி கமலா ஹாரிஸ் என்பது குறிப்பிடத் தக்கது.
செனட்டில் இருந்தபோது, புலனாய்வு குழு மற்றும் நீதித்துறை குழு ஆகிய இரண்டு முக்கிய குழுக்களில் கமலா ஹாரிஸ் பணியாற்றினார். தொடர்ந்து, 2020ம் ஆண்டில் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக தன்னை பரிந்துரைக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தார். ஆனால் ஆரம்ப கட்டத்திலேயே அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து வெளியேறினார்.
அப்போது ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்ட ஜோ பைடன், கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்து எல்லோரையும் ஆச்சரியப் பட வைத்தார். மேலும், கமலா புத்திசாலிதனம் மிக்கவர், உறுதியானவர், அனுபவம் வாய்ந்தவர், மற்றும் கடுமையாக போராடக்கூடியவர் என்றெல்லாம் கமலா ஹாரிஸை ஜோ பைடன் புகழ்ந்து தள்ளினார்.
ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் இணைந்து அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸை தேர்தலில் தோற்கடித்தனர். 2020 அதிபர் தேர்தலுக்கு பிறகு துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிஸ், துணை அதிபரான முதல் பெண்மணி, முதல் கறுப்பினத்தவர் மற்றும் முதல் ஆசிய வம்சாவளியினர் உள்ளிட்ட பல பெருமைகளைப் பெற்றார்.
2021 நவம்பர் மாதத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது, அவருக்குப் பதிலாக 75 நிமிடங்கள் அதிபர் பொறுப்பை கமலா ஹாரிஸ் வகித்தார். அமெரிக்க துணை அதிபர் என்ற நிலையில் கமலா ஹாரிஸ் அமெரிக்க செனட்டின் தலைவராகவும் இருந்தார். எனவே, மசோதாக்களில் வாக்குகள் சமமாக இருக்கும் போது செனட் தலைவரான கமலா ஹாரிஸ் தன் வாக்கை அளிக்க முடியும்.
அமெரிக்காவின் வரலாற்றில் வேறு எந்த துணை அதிபரையும் விட அதிகமாக 32 முறை இந்த பிரத்யேக அதிகாரத்தை பயன்படுத்தி கமலா ஹாரிஸ் சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம், அதிபர் ஜோ பைடன், மீண்டும் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தார். மேலும், துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக பரிந்துரை செய்தார். முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்ட பெரும்பாலான ஜனநாயக கட்சி தலைவர்கள், துணை அதிபர் கமலா ஹாரிஸை ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளராக தேர்வு செய்னர்.
ஆரம்பத்தில் ட்ரம்பை விட கமலா ஹாரிஸ் அதிகமான மக்கள் செல்வாக்கு பெற்றிருந்தார் என்றாலும் , கடந்த அக்டோபர் மாத இறுதியில், டிரம்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையே மக்கள் செல்வாக்கு சமமாகவே இருந்தன. பல தேசிய கருத்துக்கணிப்புகளும் இதை உறுதி செய்தன.
துரதிஷ்டவசமாக கமலா ஹாரிஸ் தோல்வியை தழுவியதால் அமெரிக்க அதிபராகும் முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் மற்றும் முதல் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் என்ற பெருமையை இழந்தார்.